Archive for ஜூன், 2006

தமிழர் பிரதேசங்கள்மீது குண்டு வீச்சு.

ஜூன் 15, 2006

முல்லைத்தீவில் திடீர் விமானக் குண்டுவீச்சு: 5 பேர் படுகாயம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தின.

இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளை இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின.

இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புகள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.

தொடர்ந்து முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.

நன்றி-புதினம்

இதேவேளை திருகோணமலை முதூர்பிரதேசங்களிலும் தமிழர் குடியிருப்புகள் மீது பாரிய எறிகனை வீச்சுக்கள் நடை பெறுவதாக அறிய முடிகிறது. சம்பூர், மூதூர் பிரதேங்களை இலக்குவைத்து பல்குழல்எறிகணைகள், மற்றும் ஆட்லறிகள் ஏவப்படுகின்றன சேதவிபரம் தெரியவில்லை.

கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு.

ஜூன் 14, 2006

யதார்த்த நிலைமைக்கு புறம்பானவற்றைத்தான் மகிந்த சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கிறார்:

இலங்கையின் வடக்கு – கிழக்கில் உள்ள யதார்த்த நிலைமைக்குப் புறம்பானவற்றைத்தான் ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளார்.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தால் இந்தத் தீவில் நாங்கள் தொடர்ந்து இயங்குவோம். இல்லையெனில் இயங்க மாட்டோம்.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இல்லாத நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் இல்லாமல் போகும்.
சிறிலங்கா அரசாங்கமும் அரச படையினரும் இணைந்து செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் ஆணைகளுக்கு அரச படையினர் கீழ்படிந்து செயற்பட வேண்டிய காலம் இது.
அண்மையில் உண்மைகளின் அடிப்படையிலான அறிக்கை கண்காணிப்புக் குழுவினரால் வெளியிடப்பட்டது. அதில் சில விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

பொதுமக்கள் பகுதியில் நடைபெறும் படுகொலைகள் குறித்த அரசாங்கத்தின் விசாரணைகள் பாரபட்சமாக உள்ளன. வடக்கு – கிழக்கில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது மற்றும் குழந்தைகளினது எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழ்கின்றனர்.
முறையான விசாரணைகளை அரசாங்கம் நடத்தினால்தான் கொடூரப் படுகொலைகளை நிறுத்த முடியும்.
அரசாங்கம் இந்தப் படுகொலைகள் தொடர்பில் கண்ணை மூடிக்கொண்டு உள்ளது. எந்த ஒரு சம்பவங்களிலும் விசாரணைகள் கூட தொடங்கப்படவில்லை.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்தான் இத்தகைய படுகொலைகள் நடைபெறுகின்றன.
இதற்கான பொறுப்பு சிறிலங்கா காவல்துறையினரிடம் உள்ளபோதும் படுகொலைகள் தொடர்பான தரவுகளை கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்புவதில்லை.
நிறைய வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு தரவுகளை அளிப்பதில் முடக்கத்தை சிறிலங்கா காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வழக்குகள் அனைத்தும் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டியவை. அனைத்து வசதிகளும் மனித வளங்களும் உள்ள நிலையில் எதுவித காரணமும் கூற முடியாது.
இந்தப் படுகொலைகள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு காணப்படும். அப்பாவி குழந்தைகள் நாளாந்தம் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் மறுக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக வட பகுதியில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மா அதிபரினது முடிவை கண்காணிப்புக் குழு எதிர்பார்த்து உள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கு குறித்து ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் யதார்த்த கள நிலைமைகளுக்கும் முரண் உள்ளது
கடற்கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் கண்காணிப்புக் குழுவினர் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உறுதியான உத்திரவாதம் அளிக்கப்படாத வரையில் சிறிலங்கா கடற்படையினரின் கலங்களில் பயணிக்க மாட்டோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தற்போது கண்காணிப்புக் குழுவில் இரு நாட்டுப் பிரதிநிதிகளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நோர்வே மற்றும் ஐஸ்லாந்து பிரதிநிதிகளே உள்ளனர். நோர்வேத் தரப்பில் தங்களது பிரதிநிதிகளை அதிகரிப்பதாக இல்லை என்று தெரிவித்துவிட்டனர் என்றார் ஹென்றிக்சன்.

நன்றி> புதினம்.

ஜுன் 16-இல் ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டம் தமிழகத்தில்.

ஜூன் 13, 2006

நெடுமாறன், இராமதாசு, வைகோ, கொளத்தூர் மணி, திருமாவளவன் பங்கேற்பு
தமிழ்நாடு முழுவதும் எதிர்வரும் ஜுன் 16ஆம் நாளன்று ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு நடத்த உள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள முப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகி ஆயிரக் கணக்கான தமிழர்கள் தப்பிப் பிழைத்து இந்தியாவில் அகதி களாகக் குவியத் தொடங்கியுள்ளனர். மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தப்பி வர வழியில்லாமல் தவிக்கின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (16-ந்தேதி) மாலை 4 மணிக்கு சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்துக் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

1. இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதல் கூற வும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக்கட்சிக் குழு ஒன் றினை உடனடியாக அனுப்ப வேண்டும்.

2. இந்தியப் பிரதமரை சிங்களத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களின் குழு பிரதமரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறு வனர் மரு.இராமதாசு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செய லாளர் தொல்.திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக ஒடுக் கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் பொழிலன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சௌந்தரராசன் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க பொருளாளர் மாணிக் கம், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள் கிறார்கள்.

சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ்த் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் இளமுருகனார் கலந்து கொள் கிறார்கள். தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சி.முருகேசன் பங்கேற்கிறார்கள்.

கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், தமிழர் தேசிய இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காந்தி கலந்து கொள்கிறார்கள். சிவகங்கையில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் மெல்கியோர், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன் கலந்து கொள்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>லங்காசிறி

தமிழர் கொலைகளின் பின்நின்று செயல்படுபவர்.

ஜூன் 13, 2006

ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவில் வடக்கு கிழக்கில் தமிழர் படுகொலை – TCHR
அதிபர் மகிந்த ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவிலேயே வடக்கு கிழக்கில் தமிழர் மீதான படுகொலைகள் நடைபெறுவதாக பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் நடைபெறும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் யாவும் தமிழ் மக்களை பீதி கொள்ளும் நோக்கில் அதிபர் மகிந்த ராஜபக்சாவினாலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாரான ராஜபக்சாவின் சகோதரன் கொத்பாய ராஜபக்சாவினதும் உத்தரவிலுமேயே தமிழர் கொலைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

இப்படுகொலைகளை மேற்கொள்ளும் துணை ஆயுதக்குழுக்களுக்கு சன்மானப்பட்டியல் ஒன்று தாயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு படுகொலைகளுக்கும் சன்மானம் வழங்கப்படுவதாகவும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இவ் சன்மானப்பட்டியலில், கைக்குண்டுத் தாக்குதல் செய்வோருக்கு 15.000 ரூபாவும், கிளைமோர் தாக்குதல் செய்வோருக்கு 20.000 ரூபாவும், விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக முன்னின்று உழைப்போரை கொலை செய்வோருக்கு 100.000 ரூபாவும் சன்மானமாக வழங்கப்படுவதுடன், அரச படைகள் மன்னிப்புடன், தாம் விரும்பியவர்களை வடக்கு கிழக்கில் கொலை செய்யவும், பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தவும் ராஜபக்சா சகோதரார்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகளாகவும், சிறிலங்காவில் பாதுகாப்பு முடிவுகளை மேற்கொள்பவர்களாகவும் சிறிலங்காவின் தென் பகுதியை சேர்ந்த ராஜபக்சா சகோதரார்ளும், அவர்களது முன்னாள் பாடசாலை தோழர்களும், நண்பர்களும், உறவினர்களுமே உள்ளார்களென்றும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நன்றி>பதிவு.

சிறுவர் படுகொலையை சர்வதேசம் கண்டிக்காதது ஏன்?

ஜூன் 13, 2006

சிறிலங்கா படைகளினால் 24 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டது, தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மௌனமாக இருப்­ப­தாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சாட்­டியுள்ளனர்.

சிறுவர்களை படையில் சேர்ப்பதாக இச்சர்­வதேச உரிமை அமைப்புக்கள், விடுதலைப்­புலி­கள் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டி­வந்­த­ன.ஆனால் இன்றைய நிலையில், இலங்கை இனப்பிரச்சினையால் அண்மைக்காலமாக சிறு­வர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்­டிப்பதற்கு இச்சர்வதேச அமைப்புக்கள் தவ­றிவிட்டன என, விடுதலைப்புலிகள் குற்­றம் சுமத்தியுள்ளனர்.

சிறுவர்களின் நலன்களில் அக்கறை செலுத்­து­­வ­தாகக் கூறிக்கொள்ளும் இச்சர்வதேச உரிமை நிறுவனங்கள், தற்போது நடை­பெறும் சிறுவர்களின் ஒவ்வொரு படு­கொலை­யின் பின்னரும் தமது கண்டனத்தை வலியுறுத்திக் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் தொடர்ந்தும் மௌன­மாகவே இருக்கின்றனர்.

அண்மைய நாட்களில் படுகொலை செய்­யப்­பட்ட 24 சிறுவர்களின் பெயர்க­ளை­யும் புலி­கள் பட்டியல் படுத்தியுள்ளனர். இதில் அண்­மையில் மன்னார், வங்காலையில் கொடூ­ரமாக படுகொலை செய்யப்பட்டு தூக்கி­லிடப்பட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

கடந்த மாதமும் யுனிசெவ் அமைப்பு விடு­தலைப்புலிகள் சிறுவரை படையில் சேர்ப்­பதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்­பிடத்­தக்கது.

நன்றி>புதினம்.

சிறிலங்காவில் 40 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள்.

ஜூன் 12, 2006

சிறிலங்காவில் 40 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவன அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி சிறிலங்காவின் தேசிய சிறார் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளதாக கொழும்பின் ஆங்கில நாளேடான டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான சிறிலங்கா சிறார்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒருபால் உறவுக்காக பயன்படுத்துகின்றனர். அதேபோல் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான கிராமப்புற சிறிலங்கா சிறார்களை குற்றச் செயல்களைப் புரிகின்ற குழுவினர் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என்றும் யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவன புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
சிறார் பாலியல் தொழிலில் உலகின் சொர்க்கமாக சிறிலங்கா விளங்குகிறது.
சிறிலங்காவில் 2 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக அரசாங்கம் கணக்கிட்டுள்ளது. ஆனால் பல்வேறு அமைப்புகள் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் என்று தெரிவிக்கின்றன.
இந்த சிறார்களில் 80 வீதமானோர் ஆண்கள். இவர்களில் சுற்றுலா மையங்களில் வெளிநாட்டுப் பயணிகளின் ஒருபால் உறவுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.
35 ஆயிரம் சிறார்கள் சிறு தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நன்ரி>புதினம்.

ஈழத்தமிழர் குறித்து தமிழகத்தமிழர் கருத்து.

ஜூன் 10, 2006

ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு

தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றின் தொகுப்பு:

இந்திராவின் அணுகுமுறை

“புலம் பெயர்ந்த தமிழர்கள்” தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் சிக்கல் எப்போதோ தீர்வு கண்டிருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான கிழக்கு வங்க மக்களின் எழுச்சிக்கு இந்திரா கண்ட தீர்வு இதற்கு முன்னுதாரணம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ராஜீவின் மரணம் என்ற ஒரே காரணத்தைச் சுட்டிக்காட்டி நம் தார்மீகக் கடமையை நிறைவேற்றாமல் கையைக் கட்டிக் கொண்டிருப்பதும் இதில் மேலை நாடுகளைத் தாராளமாக தலையிட அனுமதித்து பார்வையாளர்கள் நிலையில் இருந்து கொண்டு இருப்பதும், உலகின் மிகப் பெரிய சனநாயக நாடாகிய நமக்கு ஏற்புடையதன்று.

சோம. நடராசன், கரூர்.

நீதியின் பக்கம் நிற்போம்

“விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை விதித்தது ஐரோப்பியக் கூட்டமைப்பு” எனும் செய்தி (31.05.06) படித்தேன்.

ஈராக்கின் மீது அநியாயமாகப் போர் தொடுத்து, லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலக மக்களால் “ஆக்கிரமிப்பாளன்” என வன்மையாகக் கண்டனம் செய்யப்படும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும்,

இலங்கைத் தமிழர்களின் நியாயமான சுயாட்சிக் கோரிக்கைக்கு எவ்விதத்திலும் இணங்காத சிங்களப் பேரினவாதப் போர் வெறி ஆட்சியாளர்களும் இணைந்து மேற்கொண்ட செயலே இது என்பது தெளிவு.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான, கௌரவமான அமைதித் தீர்வு காண ஊறுசெய்யும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேற்கொண்டுள்ள தடைகளை இந்திய அரசும் தமிழக அரசும் புறக்கணிக்க வேண்டும்;

நீதியின் பக்கம் நாம் நிற்க வேண்டும்.

தி.க.சி., நெல்லை 6.

நியாயமான கோரிக்கை

ஈழத் தமிழர் பிரச்சினைகள், துன்ப – துயரங்களைப் பற்றி உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக, தக்கச் சான்றுகளுடன் – தீர்வுகளுடன் மறவன்புலவு க.சச்சிதானந்தன் எழுதி வருவதற்கு மேலும் ஒரு சான்று – அவர் எழுதிய “அகதிகளுக்குப் பாதுகாப்பு ஓடை” (01.06.06) எனும் கட்டுரை.

பேசாலை மீனவர்கள் பற்றிய குறிப்புகள் அரிய தகவலாகும்.

இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பிற்கு இந்திய எல்லைக்குள் “பாதுகாப்பு ஓடை” அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை மிக நியாயமானது வரவேற்கின்றேன்.

அவருடைய இந்தத் தனிநபர் கோரிக்கை – தமிழர்களின் கோரிக்கையாக, தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இந்திய அரசிடம் வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.

பெ.சு. மணி, சென்னை 33.

இலங்கைக்கு உதவக் கூடாது

தன் சொந்த மண்ணைவிட்டு உயிர்பிழைக்க தமிழகம் வந்து சேரும் ஈழத் தமிழர்களை மனிதநேயத்தோடு அரவணைப்பதும் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கும் படகுகளைத் திருப்பி அனுப்புவதும் மிகவும் அவசியமானது.

இதுவரை சிங்கள அரசுகள் ஒப்புக்கொண்ட “உடன்பாட்டை” மதித்ததே இல்லை என்பதுதான் வரலாறு. ஆகவே இலங்கை அரசுக்குத் துணை போகக் கூடாது என தமிழக சட்டமன்றத் தீர்மானம் மூலம் இந்திய அரசுக்கு உணர்த்துவது அவசியம்.

மா.கோ. தேவராசன், சிதம்பரம்.

காக்கும் படை

நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொன்று ஒரே குழியில் போட்டுப் புதைத்த இராணுவத்தையோ, யாழ். நூலகத்திலுள்ள புத்தகப் பொக்கிசங்களைத் தீயிட்டு அழித்த வக்கிர புத்திக்காரர்களைப் பற்றியோ, சிறைக்குள் நிராதவராக இருந்த குட்டிமணியையும் அவருடன் சேர்ந்த துடிப்புள்ள இளைஞர்களையும் கண்களைப் பிடுங்கி துடிக்கத் துடிக்கக் கொலை செய்த பாவிகளையோ நாம் மறந்து விடுகிறோம்.

ஆனால் “தமிழ் அகதிகளை” மிகச் சாதாரணமாக எண்ணி, போனால் போகிறதென்று ஆட்டு மந்தை போல தங்குவதற்கு இடமளிக்கிறோம்! என்ன கொடுமை! நாம் தந்த அன்பளிப்பு கச்சதீவு. அதை நாமே கேட்டுப் பெற வேண்டும் அல்லது பறித்துக் கொண்டு அதில் நமது இராணுவத்தை – தமிழ் அகதிகளை, மீனவர்களைக் காக்கும் படையாக நிறுத்த வேண்டும்!

இரா. கல்யானசுந்தரம், அனுப்பானடி

நாதியற்ற தமிழர்கள்!

“புலம் பெயரும் தமிழர்கள்” – தலையங்கம் (31.05.06) கண்டேன். கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்ததை “இனப் படுகொலை’ என அறிவித்து உலக நாடுகளுக்கெல்லாம் பறையறைந்த கையோடு இந்திய இராணுவத்தை அனுப்பி வங்காளதேசம் உருவாக முழுமூச்சாக ஈடுபட்டார் இந்திரா காந்தி.

சிங்களக் காடையர்களால் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வெட்டிக் கொல்லப்பட்டபோது “இனப் படுகொலை” என்று கூற டில்லியில் யாருக்கும் மனம் வரவில்லை.

நேரு – கொத்தலவாலா, சாஸ்திரி – சிரிமாவோ காலத்திலிருந்தே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையை அணுகிய போதெல்லாம் பேரிழப்புக்குள்ளாவோர் தமிழர்களே என்பதை மறந்துவிட முடியாது.

யாசீர் அராபத்துக்குத் தூதரகம் அமைக்க அனுமதியும், ஐ.நா. சபையில் அங்கம் வகிக்க உரிமையும் பெற்றுத் தர முன்வந்த இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் இன உணர்வை மதிக்கத் தவறிவிட்டது.

ஈழப் போராளிகள் தங்கள் இன விடுதலைக்காகப் போராடுவோர் என்ற அடிப்படை உண்மையைப் புறக்கணித்துவிட்டுச் சிங்கள அரசுடன் சமரசம் செய்து கொள்ளக் கச்சதீவைக் காணிக்கையாக அளித்த இழிவு, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறித்து அன்றாடம் உயிரையும் பறித்துக் கொண்டிருக்கிறது.

மைய அரசைப் பொறுத்த அளவில் ஈழத் தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் ஒரே இனம் என்று கருத வேண்டிய தேவையின்றி, இங்கே குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்க ஈழத்தில் துப்பாக்கியும் பீரங்கிகளும் முழங்குகின்றன.

வங்கதேச அகதிகள் இந்தியாவில் குவிந்தபோது அவர்களின் மறுவாழ்வுக்கென “அகதிகள் நிவாரண நிதி” என்னும் பெயரில் ஒவ்வோர் அஞ்சல் அட்டை, அஞ்சல் உறையில் ஐந்து காசு சிறப்புத் தபால் தலை ஒட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அகதிகளில் இன வேறுபாடு பார்க்கும் மைய அரசு, ஈழத் தமிழர்கள் திடீரென ஆயுதமேந்திய போராளிகளாக மாறிவிடவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறவழிப் போராட்டங்களை நடத்தியும் பயனற்றுப் போன நிலையில், ஈழத் தமிழினம் பூண்டற்றுப் போகாமல் தடுக்க ஆயுதமேந்திய போரே இறுதிவழி என்னும் தவிர்க்க இயலாத முடிவுக்கு வர நேர்ந்தது என்று தினமணி நாளேட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

நன்றி>புதினம்.

ஒஸ்லோ மாநாட்டின் சிறீலங்காவின் சதிமுயற்சி படுதோல்வி.

ஜூன் 8, 2006

நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ தலைநகரில் இன்று ஆரம்பமாகி நாளை மாலை வரை நடைபெறும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை பேச்சுவார்த்தையாக மாற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சதிமுயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.

தமிழர் தாயகத்தில் கொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு சமாதான முன்னெடுப்புக்களுக்கான புறச்சூழலை இல்லாதொழி்த்த சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினை திசை திருப்பும் நோக்கோடு இருதரப்பிற்குமான பேச்சு வார்த்தையாக சித்தரிப்பதற்கான நலினத்தனமான முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தது.

அத்துடன் ஒஸ்லோ கூட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசாங்கத்தையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து கடந்த கால பேச்சுக்களைப் போன்று பேச்சுக்கான தொடக்க நிகழ்வு ஒன்றை முன்னெடுக்க இராஜதந்திரிகள் சிலர் முயற்சி செய்துள்ளனர்.

முடங்கிக் கிடக்கும் பேச்சுவார்த்தையை பின்வாயிலாக ஆரம்பித்து சமாதானம் தொடர்பான போலியான நம்பிக்கையைப் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கமும் சில இராஜதந்திரிகளும் மேற்கொண்ட திரைமறைவு முயற்சி விடுதலைப் புலிகளின் சாதுரியமான இராஜதந்திர நகர்வால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும நடைபெறும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் நோர்வே அனுசரணையாளர்களையும் கண்காணிப்பாளர்களையும் தனித்தனியாகச் சந்திக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசாங்கத் தூதுக்குழுவினரை சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ள சூழலில் நடுநிலைமைத் தகமையை இழந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியவை தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பது பொருத்தமாக இருக்காது என விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.

இதுகுறித்த தலைமைப்பீடத்தின் தீர்க்கமான முடிவுகளை ஒஸ்லோ கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

ஒஸ்லோ கூட்டம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினத்தை அழித்தொழிப்பதில் கங்கணம் கட்டியவாறு அப்பாவித் தமிழர்களை கொன்றொழிப்பதில் ஈடுபடும் சிறீலங்கா அரசாங்கத்தோடு எதுவும் பேசுவதற்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி>பதிவு.

அல்லைப்பிட்டி மக்களை டக்கிளஸ் மிரட்டினார்.

ஜூன் 7, 2006

ஈபிடிபி ஆயுதாரி டக்கிளஸ் தேவானந்தா யாழ் விரைவு.
ஈபிடிபி ஆயுததாரி டக்கிளஸ் தேவானந்தா இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். சிறீலங்காப் பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புடன் சென்ற இவர் ஈபிடிபிஇன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

முன்னதாக அல்லப்பிட்டி மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் சென்ற ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தா ஈபிடிபி உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் அங்குள்ள சிறீலங்காப் படையினரைச் சந்தித்த ஈபிடிபி ஆயுததாரிகளுக்கு கூடிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதனை அடுத்து யாழ் குருநகர், நாவாந்துறை ஆகியவற்றுக்கு சென்ற ஒட்டுக்குழு ஆயுதாரி டக்கிளஸ் தேவானந்தா அல்லப்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை அல்லப்பிட்டிக்குத் திரும்புமாறு மிரட்டியுள்ளார்.

நன்றி>புதினம்

அல்லைப்பிட்டி வழக்கில் மற்றுமொருவர் இன்று சாட்சியம்.

ஜூன் 6, 2006


இலங்கையின் வடக்கில் யாழ் தீவகப்பிரதேசமாகிய அல்லைப்பிட்டியில் அண்மையில் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது சாட்சியமளித்த சாட்சி ஒருவர், தமது வீட்டின் மாடிப்பகுதிக்கு பெட்ரோமக்ஸ் விளக்கை கையில் கொண்டு வந்த கடற்படையினர் தன் கண்முன்னால் தனது கணவனையும், தம்பியையும் சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்துள்ளார். ரொபின்சன் வயலட் என்ற 28 வயதுடைய இப்பெண்ணின் தங்கை, கணவன், அவர்களின் பிள்ளைகள் இருவர் ஆகியோர் அந்த வீட்டின் கீழ் தளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இதன்போது சாட்சியின் தந்தை காயமடைந்ததாகவும், வீட்டிற்கு வெளியில் வைத்து தமது உறவினர் ஒருவரும், தனது தந்தையுடன் கடற்றொழில் செய்யும் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணவனையும், தம்பியையும் சுட்டுக்கொன்றவர்களை அடையாளம் காட்ட முடியும் என்றும் அந்தச் சாட்சி இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே உத்தரவிட்டபடி இந்த வழக்கு தொடர்பான அடையாள அணிவகுப்புக்கு புலனாய்வு பொலிசார் ஒழுங்கு செய்யாமைக்கும், புலனாய்வு தொடர்பான அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தவறியமைக்கும் ஊர்காவற்துறை நீதிபதி ஜெயராமன் புலனாய்வு பொலிசார் மீது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், நீண்டகால இடைவெளியில் அடுத்த தவணைக்கான விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு ஒழுங்கு செய்வதுடன், இந்தக் கொலைகள் தொடர்பான புலனாய்வு பொலிசாரின் அறிக்கையை அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் புலனாய்வு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிடடுள்ளார்.

இணைப்பு : newstamilnet.com