Archive for ஜூன், 2006

றோவின் திட்டம் வெற்றிபெறுமா ?

ஜூன் 29, 2006

கடந்த இரண்டு நாட்களாக, கலாநிதி பாலசிங்கம் அவர்கள் மறைந்த இந்தியப் பிரதமர் குறித்து இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி பலத்த சர்ச்சைகளை இந்திய – இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விடுதலைப் புலிகளினால் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களால் ராஜீவ் கொலை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட அதே விடயங்களையே மீண்டும் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவின் என்.டி.ரீ.வி ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் இந்திய ஊடகங்களினால் தமது முன்னாள் பிரதமர் குறித்து எழுப்பப்படாத கரிசனை, பாலசிங்கம் அவர்களின் புதிய பேட்டியினை அடுத்து எழுந்துள்ளமை ஆச்சரியத்தை தருகின்றது.

இதற்கு மேலாக, திட்டமிட்ட முறையில் பரப்புரை செய்யப்பட்டுள்ள இந்த செய்தியின் மூலம் இந்திய உளவு நிறுவனமான றோ, தமிழ்த் தேசியத்தினை முடக்குவதற்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்பதே உண்மை.

இனி றோவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சதித் திட்டத்தினை சற்று உற்று நோக்குவோம்.

கடந்த வாரம் ரெகெல்கா இணையத் தளத்தில் வெளியாகிய செய்தியான “விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய உளவு நிறுவனம் றோ புதிய படை ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது” என்ற செய்தி மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் வெளியிடப்பட்டமை கவனத்தில் கொள்ளப்படவேணடும்.

அடுத்து கவனிக்கப்பட வேண்டியது, இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் ஈழத் தமிழர்கள் மீது பெருகி வரும் ஆதரவு றோவுக்கு பெரும் சஞ்சலத்தை கொடுத்துள்ளது.

இதைக் கட்டுப்படுத்துவதற்கு ராஜீவ் மரணத்தை மீண்டும் தூசி தட்டுவதைத் தவிர வேறுவழியில்லை எனவே தான் இந்தச் செய்தி விரைவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

மேலும், ராஜீவ் காந்தியன் மனைவியின் தலைமையிலான ஆளும் கொங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழர்கள் மீதான ஆதரவுப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளமை றோவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளமை மறுக்கப்பட முடியாத உண்மை.

இவ்வளவு காலமும் தமது திட்டத்திற்கு அமைய இடம்பெற்ற சகல நடவடிக்கைகளும் தமது ஆளுகைக்கு அப்பால் சென்றுகொண்டிருப்பதை பொறுக்க முடியாத றோவினர் தமது நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

இதன் முதல் வடிவம்தான் என்.டி.ரீ.வியின் ஜேர்மனிய நிருபர் மூலம் பாலசிங்கம் அவர்களைப் பேட்டிகான வைத்து, திட்டமிட்ட முறையில் – இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களிடையே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தினை பரப்பும் வகையிலான செய்தியை வெளியிட்டிருந்தனர்.

இந்தச் செய்தியை வெளியிட்டதன் மூலம் றோவினர் இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நிலை என்பவற்றினை கணித்து தமது சதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தயாராகுகின்றனர்.

றோவின் திட்டம் என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுபடுத்துவதற்கு நெடுங்காலமாக தமது முயற்சிகளை மேற்கொண்டுவரும் றோ பெரும் தோல்விகளையே கண்டுவந்துள்ளது.

றோவினர் தமது கடந்த கால முயற்சிகளில், விடுதலைப் புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரராசாவினை ஈடுபடுத்தி தோல்வியடைந்தனர். அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாதத்தைக் கிளப்பி முரளீதரனை ஈடுபடுத்தினர். இதிலும் தோல்வியையே றோவினர் சந்தித்தனர்.

எனவே இவர்களின் புதிய முயற்சியினைச் சற்று நோக்குவோம்,

• இனிவரும் காலங்களில் தமது ஊடகங்களின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவர்.

குறிப்பு: இதற்கு உறுதுணையாகச் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் பத்தி எழுத்தாளர் கடந்த பல வாரங்களாக புலி ஆதரவுப் பத்திகளை எழுத ஆரம்பித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

• இந்தியா தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தரும். ஆனால், விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும்.

இந்தியா தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தரவள்ளது ஆனால் விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற செய்தியை பரப்புரை செய்வதன் மூலம் மக்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட வைக்கலாம் என்பதே றோவின் புதிய திட்டம்.

• பாலசிங்கம் அவர்களின் பேட்டியினை தளமாக வைத்து செய்யப்படவுள்ள பரப்புரை…

தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர்தான் தடையாகவுள்ளார் என்றும் மற்றவர்கள் தீர்விற்கு ஆதரவாகவுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரிவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது என்ற தொனியிலான செய்திகள்.

எனவே இறுதியாக, தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஊடகங்கள் இவ்வாறான விடயங்களை மிகவும் புத்திசாலித்தனமாக கையாளவேண்டிய ஒரு காலகட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விழித்துக்கொள் தமிழா! இல்லையேல் விடிவு கிடைக்காது.

உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களைப் பின்வரும் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.

andrew.rasiah@gmail.com

நன்றி>பதிவு.

Advertisements

ஈழத்திற்கான அமெரிக்க நாளேட்டின் தீர்வு.

ஜூன் 29, 2006

ஈழத் தீவில் மீண்டும் யுத்தம் வெடிப்பதற்கான சூழல் மேலோங்கி வருவதாக குறிப்பிட்டு, ஆசிரியர் தலையங்கத்தை வரைந்திருக்கும், (Boston Globe)பொஸ்ரன் குளோப் எனப்படும் அமெரிக்க நாளேடு, சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்தும் சிறீலங்கா
அரசாங்கத்தின் பிடியில் இருந்து, வடக்குக் கிழக்குப் பிரதேச தமிழ் மக்கள் விடுதலை பெற்று, புதிய அரசியலமைப்பின் கீழ், தன்னாட்சியுரிமையுடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதன் மூலமே, இனநெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என சுட்டிக் காட்டியுள்ளது.
சிங்கள தேசம் கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகளின் வடுக்கள், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருந்து நீங்காத நிலையில், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும், (Loose Confederation) லூஸ் கொன்பெடரேசன் எனப்படும் தளர்வான கூட்டு இணைப்பாட்சி மூலம் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பொஸ்ரன் குளோப் நாளேடு அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வாறான ஆட்சியமைப்பு, குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மத்திய அரசாங்கத்தையும், வலுவான அரசியல் அதிகாரங்களையும், தனியான ஆயுதப் படைகளையும் கொண்ட மாநில அரச அமைப்பையும் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

ஜூன் 29, 2006

இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழர்களின் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்காவின் “போஸ்டன் குளோப்” ஏடு தெரிவித்துள்ளது.

போஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கம்:

இலங்கை இனப்பிரச்சனையானது இங்கு சிறிது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் 1983 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையேயான வன்முறைகளால் மொத்தல் 70ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சிறிங்கா இராணுவத்தின் துணை தளபதி கடந்த திங்கட்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது அரசாங்கத்துக்கும் போராளிகளான தமிழ்ப் புலிகளுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு ஏற்கனவே முறிவடையும் நிலைமையை மேலும் சீர்குலைத்து மற்றொரு இரத்தகளரிக்கு இட்டுச் செல்லக் கூடும்.

உலக நாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபி அனான், இருதரப்பாரையும் நோர்வேயின் அனுசரணையின் கீழ் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“நல்ல சூழ்நிலைகளிலும் மோசமான சூழ்நிலைகளிலும் இலங்கை விடயத்தில் நோர்வே உறுதியாக இருந்துள்ளது” என்று நோர்வே அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் புலிகளின் தலைவர்கள் மீண்டும் போரைத் தொடங்காதவாறு தடுத்து பேச்சுக்கள் மூலம் தீர்வு காண்பதில் குறிப்பிட்ட அளவுக்கு சர்வதேச அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் செயற்பட முடியும்.

பழையனவற்றை மறந்து அமைதியை உருவாக்குவதற்காக இருதரப்பினரும் சமரசங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

சிங்களப் பெரும்பான்மையினத்தவரின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு நியாயப்பூர்வமான முறைமைகளைக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகள், படுகொலைகளால் அரச அதிகாரிகள், பல சிங்களவர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய தாக்குதல்களால் அது பயங்கரவாத வன்முறையாக்கப்பட்டு இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளானது புறக்கணிக்கப்படும் நிலை உருவானது.

அரசியல் வழித் தீர்வு தேவையாக உள்ளது.

சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள

இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ்படிதலிலிருந்து

வடக்கு – கிழக்கில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யக் கூடிய வகையிலான புதிய அரசியல் யாப்பை உள்ளடக்கியதாக இத்தீர்வு இருக்க வேண்டும்.

தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் அண்மையில் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இந்தத் தீர்வு பற்றி மேலோட்டமாகக் கூறியிருந்தார்.

“தமிழ் புலிகள் பயன்படுத்துகிற வழிமுறைகளை நாம் நிராகரித்த போதிலும், தமிழ் இன மக்களால் எழுப்பப்படுகிற கோரிக்கைகள் நியாயப்பூர்வமானவை. எவர் ஒருவருவரும் தங்களது சொந்த பிரதேசங்களை ஆளுகின்ற உரிமை, தங்களது தாயகத்தை நிர்வகித்தல் என்பவை நியாயப்பூர்வமான கோரிக்கையாகும்” என்று தெரிவித்திருந்தார்.

தமிழர்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் தன்னாட்சியுடன் வாழும் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளமையானது அமெரிக்காவின் கொள்கையில் வரவேற்கத்தக்க ஒரு பரிணாம வளர்ச்சியாகும்.

இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாத்து-

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கு அனுமதித்து

செயற்படும் வகையிலான நெகிழ்வான ஒரு கூட்டமைப்பை உருவாக்க

நோர்வேயின் ஒஸ்லோவில் பேச்சுக்கள் நடத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்-

என்.டிவியின் செய்தி, ஒரு செய்தித்திரிப்பா?

ஜூன் 29, 2006

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன் றுக்கு வழங்கிய பேட்டி சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது.
“”ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் ஒரு பெரிய வரலாற் றில் மறக்கமுடியாத துன்பியல் நிகழ்வு. அதற்காக நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அன்ரன் பாலசிங்கம் கூற, அதற்கு வேறு அர்த்தத்தைக் கொடுத்து, அவ ரது கூற்றைத் திரிபுபடுத்தி போட்டடித்திருக்கிறது சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம்.
பாலசிங்கம் கூறிய மேற்படி கருத்துக்களை வைத்துக்கொண்டு ராஜீவ் கொலைக்கான பொறுப்பை, இப்போது பதினைந்து ஆண்டு கள் கழித்து புலிகள் முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளனர், அதற்காகத் தங்களை மன்னிக்கும்படி இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் புலிகள் மன்றாடுகின்றார்கள் என்றெல்லாம் சாரப் பட தனது கருத்தை மதியுரைஞர் பாலாவின் கருத்தாகக் குறிப் பிட்டு பிரசாரம் செய்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்.
ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மதியுரைஞர் பாலா தெரி வித்த முக்கிய கருத்தை அந்த நிறுவனம் ஒளிபரப்பவில்லை.
“”ராஜீவ் கொலையை ஒரு தனி மனித கொலைச் சம்பவமாக அணுகுவது அல்லது பார்ப்பது தவறு. ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இச் சம்பவத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.” என்று பாலா குறிப்பிட்டதை அமுக்கிவிட்ட அந்த நிறுவனம், பாலா தெரி விக்காத கூற்றுக்கு பதில் கருத்துக்களை புலிகளுக்கு எதிரான பிரமுகர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் மூலம் வெளிப்படுத் தித் தனது திருகுதாள வேலையை கனகச்சிதமாக முன்னெடுத் திருக்கின்றது.
“”கடந்த கால சம்பவங்களை மறந்து, விடயங்களைத் தாராள மனப்பான்மையோடு புதிய போக்கில் அணுகுமாறு இந்திய அரசையும், இந்திய மக்களையும் நாம் வேண்டுகின்றோம்.” என்று ஈழத்தில் அல்லல்படும் தமிழர்களின் சார்பில், ஈழத் தமி ழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக நின்று மதியுரைஞர் பாலசிங்கம் அழைப்பு விடுக்க
அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு புலிகள் மீது பகையுறவும், விரோதப் போக்கும் கொண்ட இந்தியப் பத்திரிகையாளர் ராம் மற்றும் புலனாய்வாளர் கார்த்திகேயன் போன்றோரைத் தேடிப் பிடித்து அந்த சமரச முயற்சிக்கு முளையிலேயே ஆப்பு வைக் கும் திருவிளையா டலை நிறைவேற்றியிருக்கிறது இந்தியத் தரப்பின் ஊதுகுழல் நிறுவனம். மதியுரைஞர் பாலா வழங்கிய சுமார் ஒரு மணி நேரப் பேட்டியில் சில நிமிடங்களை மட்டும் “முண்டத்தை’ மட்டும் ஒளிபரப் பிய அந்த நிறுவனம் அதை முழுமையாக ஒளிபரப்புமானால் அது நிச்சயம் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் நெஞ்சை ஆழமாகச் சென்று தைக்கும் தொடும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்புக்கு உண்டு.
மதியுரைஞர் பாலாவின் கருத்தை எடுத்தெறியும் விதத்தில் அந்தச் செவ்வியை ஒட்டி கருத்து வெளியிட்ட இந்திய வெளி விவகார அமைச்சர் ஆனந்த் சர்மாவின் பதில்கள் குறித்து அழு வதா, சிரிப்பதா என்பது தெரியாமல் சஞ்சலப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள்.
“”இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்புகின்றது.” என்று வலியுறுத்திக் கோரிய இந்திய இணை அமைச்சரிடம் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டது.
“”இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோசமான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித் தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றாரே?” என்ற கேள்விக்கு இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அளித்த பதில் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளும், ஆச்சரியத்துக்குள் ளும் மூழ்கடித்தது.
முதலாவதாக
“”இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துபவர் யார்? அவர் புலி களின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா என்பது எங்களுக்குத் தெரியாது.” என்று இந்தியத் தரப்பில், அதுவும் வெளிவிவ காரத்துக்குப் பொறுப்பான இணை அமைச்சர் பதவியிலிருக் கும் ஒருவர் கூறியிருப்பது வியப்புக் குரியது.
அன்ரன் பாலசிங்கம் புலிகளின் தத்துவாசிரியர். மதியுரை ஞர், பேச்சாளர். அமைதி முயற்சிகளுக்கான புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர். இந்தியா உட்பட சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் புலிகளின் சார்பில் பல மட்டங்களில் தொடர்பு கொண்டு பங்காற்றியவர். தலைவர் பிரபாகரன் முன்பாகப் பத் திரிகையாளர்கள் திரண்டிருந்த சமயம் தலைவரையும் வைத் துக்கொண்டு “”தலைவர் பிரபாகரன் கூறினாலும் நான் கூறி னாலும் ஒன்றுதான்” எனத் தலைவரின் குரலாகப் பகிரங்கமாக ஒலித்தவர்; ஒலிப்பவர்.
அவரைப் பார்த்து “”அவர் யார்? புலிகளின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா அவர் என்பது தெரியாது.” என இந்திய அமைச் சர் கூறுவது அவரது பதவிக்குப் பொருத்தமற்ற வகையில் கேலிக் கூத்தானது.
எண்பதுகளின் நடுப்பகுதியில் புலிகள் உட்பட அனைத்து ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கும், போராளிகள் அமைப்புகளுக் கும் இந்தியா தனது மண்ணில் ஆயுதப் பயிற்சி கொடுத்துத் தூண்டி விட்டது என்பது சர்வதேசம் அறிந்த பரகசியம்.
அந்தப் பயிற்சி வழங்கப்பட்ட காலத்திலேயே புலிகளின் மதியுரைஞ ராகவும், பேச்சாளராகவும் இருந்தவர் பாலசிங்கம். அவர் யார் என்று இப்போது கேட்கும் இணை அமைச்சர் ஆனந்த் சர்மா அப்போது இந்திய அரசியலிலேயே ஒரு பிரமுகராக இருந் திருப்பாரோ என்பது தெரியவில்லை.
அந்தக் கேள்வியில் கேட்கப்பட்டது போல ஈழத் தமிழ்ப் போரா ளிகளுக்குப் பயிற்சி கொடுத்துத் தூண்டிவிட்டு இலங்கைத் தீவு, இரத்தத் தீவாக மாறுவதற்குக் காரணமாக இருந்த மூல சக்திகளில் இந்தியாவும் ஒன்று.
அந்தப் பொறுப்பை அப்படியே பொய் என்று மறுத்திருக் கிறார் இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா.
இந்தியா ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களும், பயிற் சியும் வழங்கியது சரியா, தவறா என்பது வேறு விடயம்.
ஆனால், அப்படிச் செய்துவிட்டு, அதை மறந்து, இப்போது மறுத்து, “”இலங்கையில் அமைதி,ஸ்திரம், ஐக்கியம் ஆகிய வற்றையே இந்தியா விரும்புகின்றது.” என்று உருத்திராட்சப் பூனை போல இந்தியத் தரப்பு பேச முடியுமானால்
“”கடந்த காலத்தை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் புதிய போக் கில் நல்லுறுவு பேண ஈழத் தமிழர்களும், புலிகளும் விரும்புகின்றார்கள்” என்று புலிகளின் பிரதிநிதி கூறுவதில் தவறே தும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பது நியாயமானதும் கூட.

நன்றி>உதயன்.

கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட புலிகள் தயார்.

ஜூன் 27, 2006

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் “தமிழ்முரசு” நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள் பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
“தனிப்பட்ட நலன்கள் அடிப்படையில் பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கும் திமுக அரசுக்கும் உறவுகள் நெருக்கமாக இருக்காது. ஆனால் மக்கள் நலனை வலுவாகக் கட்டியெழுப்பப்படும் போது நிச்சயமாக நாங்கள் நட்புக்கரம் நீட்டுவோம்” என்று தெரிவித்தார்.
அமைதிப் பேச்சை நடத்த இந்தியா செல்லவும் தயார் என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டத்தைப் பற்றிக் கேட்டபோது இந்தியா விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்திருக்கும் பட்சத்தில் நாங்கள் அங்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் நிலைமைகள் மாறும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
“சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும். தங்களது அடிப்படை உரிமைக்காகப் போராடும் தமிழர்களின் கோரிக்கையைத் தார்மீக ரீதியாக இந்தியா ஆதரிக்க முடியாது என்று சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில் இந்தியா உதவியுள்ளது. குறிப்பாக பங்ளாதேஷ் போராட்டத்தை ஆதரித்து உதவியும் உள்ளது.
“இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவை வைத்துக்கொண்டுதான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது போல சிங்களப் பத்திரிகைகள் அறிக்கைகளை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்பதையும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம் எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஏற்று அங்கீகரிப்பதுடன் எங்களுக்கு அதன் தார்மீக ஆதரவையும் வழங்க வேண்டும். இலங்கை அரசின் அட்டூழியங்களைக் கண்டிக்க வேண்டும். இதுவே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் தமிழ் மக்களின் விருப்பமுமாகும்.
இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சகச் செயலை இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நாள் வந்தே தீரும். ஈழத் தமிழ் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல வழி பிறக்கும் என்று சு.ப.தமிழ்ச்செல்வன் உறுதியோடு தெரிவித்துள்ளார்.

நன்றி>பதிவு.

பிரபாகரன் இயக்குனர் மகேந்திரனுடன் சந்திப்பு.

ஜூன் 27, 2006

துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.

திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து 1996என்ற அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவை எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 1996ன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோதுதான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.
சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள். அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம். சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.
அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது. என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தார் தலைவர். உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.

நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்?. உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம். ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப்படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்… யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.
நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.
கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார். விமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது, சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.

நா. கதிர்வேலன்

நன்றி – குமுதம்: 28.06.2006

விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம்.

ஜூன் 26, 2006

தமிழீழ விடுதலைப்புலிகளின் இரணை மடுவில் அமைந்த, விமான ஓடுதளம்.
படத்தை பெரிதாக பார்க்க படத்தின்மீது அழுத்தவும்.

படங்கள்>கூகிள்,சசி.

சிறிலங்கா அரசுடன் நேரடிப் பேச்சுக்கே இடமில்லை!!!

ஜூன் 26, 2006

சர்வதேச சமாதான அனுசரணையாளர்களைப் புறந்தள்ளி, சிறிலங்கா அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடாத்தும் எண்ணமெதுவும் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் தற்போது இல்லை என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பிபிசி வானொலியின் சிங்கள சேவையான சந்தேசியவிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கையில்,
நோர்வே அனுசரணையை ஓரம்கட்டி விட்டு, நேரடிப் பேச்சுக்கு வரும்படி சிறிலங்கா அரசிடமிருந்து அழைப்பு வந்ததா என்று கேட்கப்பட்டபோது, அதை ஆமோதித்த புலித்தேவன், விடுதலைப் புலிகள் உடனடியாகவே அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டதை உறுதி செய்தார்.
அத்துடன், நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இது தொடர்பான விபரங்களை விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் நோர்வே அனுசரணையை விடுதலைப் புலிகள் விரும்புவதாகவும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சமாதான முன்னெடுப்புக்களின் கடந்த கால வரலாறுகளின் படி, இருதரப்புகளும் ஒன்றையொன்று நம்புவதற்கான வாய்ப்புக்கள் முற்றாக இல்லாதிருப்பதைப் பார்க்க முடிகிறது என்று விளக்கமளித்த அவர், சிறிலங்கா ஊடகமொன்றுக்கு வெளியிட்ட தகவலின்படி, அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மகிந்தவிற்கு சாதகமான பதிலை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியை மறுத்தார்.
எந்த சந்தர்ப்பத்திலும், நேரடிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்து சாதகமான பதில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன், நோர்வே அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதற்கு விடுதலைப் புலிகள் மிகுந்த விருப்புடன் உள்ளார்கள் என்பதை, அரச தலைவர் செயலகத்திற்கும், நோர்வே பிரதிநிதிகளுக்கும் நேரடியாக அறிவித்து விட்டதாகவும் கூறினார்.

நன்றி>புதினம்.

தமிழகத்தில் துணைப்படைக்கு ஆள்திரட்ட “றோ’ உதவி?

ஜூன் 26, 2006

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான “றோ’ உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான “றோ’வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி “தமிழ்நெற்’ இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. தற்போது கருணா குழுவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான அணியாகச் செயற்பட்டுவரும் பரந்தன் ராஜன் தலைமையிலான ஈழத் தேசிய ஜனநாயக முன்னணியே (ஈ.என்.டி.எல்.எவ்) இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகள் மத்தியில் இருந்து தமது அணிக்கு இளைஞர்களை கூலிக்கு சேர்த்துக்கொள்ள முயன்று வருகின்றது.
தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களை அணுகி அவர்களுக்குப் பணம் வழங்கி அவர்களை கருணா அணியில் சேர்ப்பதற்கு ஈ.என்.டி.எல்.எவ். முயன்று வருகின்றது என்று உள்ளூர் பத்திரிகைத் தகவல்களை ஆதாரம் காட்டி அந்த இந்திய இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறு ஒட்டுப்படைக்கு ஆட்சேர்க்கப்படும் ஒருவருக்கு ஆரம்பத்தில் பத்தாயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும், அவர்கள் பின்னர் இலங்கையில் சென்று செயற்படும்போது மேலும் கூலிப்பணம் அதிக தொகையில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2004ஆம் ஆண்டு ஏப்ரலில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து சென்றபின்னர் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டுத்துணைப்படை அணியில் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பு இணைந்து செயற்பட்டு வருகிறது என்றும்
புலிகளுக்கு எதிரான பலமான அணி ஒன்றை உருவாக்குவதற்கு ஈ.என்.டி.எல்.எவ். அணியை “றோ’ அமைப்பு பயன்படுத்துகின்றது என்றும் அறிக்கைகள் குறிப்பிடுவதாக அந்தச் செய்தி கூறுகின்றது.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மறைவாகச் செயற்பட்ட பரந்தன் ராஜன் கடந்த மே மாதம் அங்கு தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு சில வாரங்கள் முன்பாக பெங்களூர் சென்றடைந்தார்.
தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது பொலிஸாருக்குத் தெரியவில்லை.
ஆனால், வேறு சில இநதிய அதிகாரிகளின் தகவலின்படி ராஜன் இப்போது இலங்கையின் மட்டக்களப்பில் கருணா அணியினர் செயற்படுகின்ற பிரதான பகுதியில் தங்கியுள்ளார் என்று தெரிகிறது.
இப்படி அந்த இந்திய இணையத்தள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி>பதிவு.

சிறீலங்கா ஆயுதப்படை=ராஜபக்சா, வேறுபடுத்தமுடியாது.

ஜூன் 25, 2006

சிறீலங்கா ஆயுதப் படைகளையும் அதிபர் ராஜபக்சவையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும், தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், சிறீலங்கா ஆயுதப் படைகளின் தளகர்த்தாவாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவாறு, சகோதரர் கோட்டபாய ராஜபக்சவை பாதுகாப்புத்துறை செயலாளராகவும் கொண்டுள்ள அதிபர் ராஜபக்சவை, ஆயுதப் படைகளில் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பது நகைப்புக்கிடமானது என சுட்டிக் காட்டியுள்ளார். சமாதான முன்னெடுப்புக்களில் இருந்து நோர்வேயை வெளியேற்றும் சதி நோக்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான திரைமறைவு முயற்சிகளில், சிறீலங்கா அதிபர் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை, உதயன் – சுடரொளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய சிறீலங்கா அதிபர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடாத்த விரும்புவதாகவும், இதற்கு மாற்றீடாக, கருணா ஒட்டுக்குழுவின் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உறுதியளித்திருந்தார். இதற்கு முன்னோடியாக, தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் இரண்டு வார காலத்திற்கு வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது எனவும், அதன் பின்னர் ஏற்படக் கூடிய நல்லெண்ண சூழலை அடிப்படையாகக் கொண்டு, இரு தரப்பும் சமாதானத்தை முன்னகர்த்திச் செல்வது என்றும், புதிய திட்டமொன்றை சிறீலங்கா அதிபர் முன்வைத்திருந்தார். மேலும், சிறீலங்கா படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தான் சிக்கியிருப்பதாகவும், இதில் இருந்து விடுபட்டு சமாதானத்தை முன்னகர்த்திச் செல்வதற்கு விரும்புவதாகவும், உதயன் நாளேட்டின் ஆசிரியரிடம், அதிபர் ராஜபக்~ கூறியிருந்தார். சிறீலங்கா அதிபரின் இந்தக் கூற்றிற்கு விளக்கமளித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், அதிபர் ராஜபக்வை ஆயுதப் படைகளில் இருந்து வேறுபடுத்;திப் பார்க்க முடியாது என்றும், இவ்வாறான நிலையில், அதிபர் ராஜபக்வின் கூற்று, நகைப்புக்கிடமானது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.இதேவேளை, சிறீலங்கா அதிபரின் திட்டத்திற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் பதில், நாளை உதயன் நாளேட்டின் ஆசிரியர் வித்தியாதரன் அவர்களின் ஊடாக கையளிக்கப்பட இருப்பதாக தெரிய வருகின்றது

இணைப்பு : newstamilnet.com