செப்டம்பர் 6th, 2006- ‍க்கானத் தொகுப்பு

மூதூர் படுகொலை: அக்சன் பார்ம் பணிகள் குறைப்பு.

செப்டம்பர் 6, 2006

சிறிலங்கா இராணுவத்தினரால் மூதூரில் தமது நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அக்சன் பார்ம் நிறுவனம் தனது பணிகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் எரிக் போர்ட் வெளியிட்ட அறிக்கை:
ஆழிப்பேரவை நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்த அமைப்பானது பணியாளர்களின் எண்ணிக்கையை 60 முதல் 70 விழுக்காடு குறைக்க முடிவு செய்துள்ளது.
நாங்கள் இலங்கையிலிருந்து வெளியேறவில்லை. ஆனால் எமது செயற்பாடுகளை குறைத்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கைக்கு எமது அமைப்பினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குவதற்கு ஏதுவான சூழ்நிலை இந்நாட்டில் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

இலங்கையில் மனித உரிமைகள் சீர்குலைந்துவிட்டது: ஐ.நா.

செப்டம்பர் 6, 2006

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையானது குறிப்பிடத்தகுந்தளவு சீர்குலைந்து போய்விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பிலான பிரிவின் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் உத்திசார் இலக்காக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இலங்கையில் மனித உரிமை முறைகேடுகளைத் தடுக்கவும் கண்காணிக்கவும் சர்வதேச அமைப்பு ஒன்று அவசியமானதும் அவசரமானதுமாக உள்ளது.
தங்களது நியாயப்பூர்வமான காரணங்களுக்கான ஆதரவை சர்வதேச சமூகத்திடம் எதிர்பார்க்கும் இருதரப்பினரும் மனித உரிமைகள் விடயத்தில் தங்களது நேர்மையான செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

நிலைமைகளைக் கட்டுப்படுத்த சர்வதேசசமூகம் தவறிவிட்டது.

செப்டம்பர் 6, 2006

இலங்கை நிலைமைகளைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் தவறிவிட்டது என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்காவில் நிலவும் படுகேடான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமுதாயம் தவறியதையொட்டி அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கிறது.
சிறிலங்கா அரசின் ஆயுதப் படைகள் திருகோணமலை மாவட்ட சம்பூர் பகுதியை பலவந்தமாக இராணுவ அடிப்படையில் தம்வசப்படுத்திக்கொண்ட கொடுஞ்செயலையே இங்கு கண்டன காரணமாகக் கூறுகிறோம்.
போர் ஓய்வு ஒப்பந்தம் ஐயந்திரிபற வகுத்துக்காட்டும் எல்லைக்கோட்டை பலவந்தமாக மீறி சம்பூர் கொடும் பிடுங்கல் நடந்திருக்கிறது. இந்த நிலையைச் சீராக்கி தவறைத் திருத்தி உடனடியாக ஆவண செய்தாலன்றி ஒப்பந்தம் முற்றாகச் சீர்குலையும் சாத்தியக்கூறும் தோன்றியிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் விதிக்கும் கடப்பாடுகளை கடைப்பிடிப்பதிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதில் தவறில்லை என்று விடுதலைப் புலிகள் முடிவுசெய்யக்கூடிய ஒரு சாத்திதியக்கூறும் சம்பூர் கொடும் பிடுங்கலால் உருவாக வாய்ப்புண்டு என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விழைகின்றது.
சிறிலங்காவின் இந்த நடவடிக்கையால் வசதி ஏற்பாட்டாளர், கண்காணிப்பாளர், ஐரோப்பிய கூட்டமைப்பினர், கூட்டுத் தலைமை நாடுகள் ஆகியோர் புறம்தள்ளப்பட்டு அவமதிக்கப்பட்டு உதாசீனப்டுத்தப்பட்டிருக்கின்றனர். ஆயினும் அனைத்துலக சமுதாயம் சிறிலங்காவைக் கண்டிக்கத் தவறிவிட்டது. தண்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தவறிவிட்டது.
போர் ஓய்வு ஒப்பந்தம் படிப்படியாக நிலைகுலைந்துவிட்டது. அத்தோடு திட்டமிட்டே வேரறுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்பிரல் மாதத்திலிருந்து ஐ.நா பட்டயத்தை தூக்கியெறியும் வகையில் தமிழ் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது வான் குண்டுகள் வீசப்பட்டன. அனைத்துலக சமுதாயத்தின் மௌனத்தை சம்மத அறிகுறியாகக் கருத்தெடுத்த சிறிலங்காவின் வான்குண்டு வீச்சு, வேகப் பெருக்கெடுத்து ஒன்றன்பின் ஒன்றாகக் கிராமங்களை அழித்தது.
மாவிலாறு நீர் பங்கீட்டுத்தகராறு விதலைப் புலிகளாலும் கண்காணிப்பாளராலும் சுமூகமாகத் தீர்க்கப்படும் தருணத்தை எட்டிய வேளையில் அரச ஆயுதப்படைகள் தாக்குதலைத் தொடுத்து கட்டில்லாக் கொலைகள் புரிந்து பலத்த இடப்பிறழ்வையும் தோற்றுவித்திருந்தன.
இங்கே கூட அனைத்துலக சமுதாயத்தின் மௌனம் சம்மத அறிகுறியாகத் திரிபு படுத்தப்பட்டு போர் தொடுக்கும் துணிச்சலையும் அரசிற்குக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் இலக்குகள் மீது வான் குண்டுத்தாக்குதல்களை அரசு முடுக்கிய ஆரம்ப கட்டத்தில் ஒப்பந்த மீறலை கண்காணிப்பாளர், ஐரோப்பிய கூட்டமைப்பினர், கூட்டுத் தலைமை நாடுகள் ஆகியோர் அடங்கிய அனைத்துலக சமுதாயம் கண்டிக்காது தன் கடமையிலிருந்து தவறிவிட்டதை அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அனைத்துலக சமுதாயத்தின் சுரத்தற்ற போக்கே தமிழ் மக்களுக்கெதிராகக் கொடுமை புரிய சிறிலங்கா அரசைத் தூண்டியதோடு ஒப்பந்தத்தை அது மீறவும் இன்றைய உருக்குலைவு நிலைக்கு இட்டுச் செல்லவும் காரணமாகியது என்றும் துணிந்து கூறலாம்.
ஒப்பந்த மீறல்களை கணிப்பெடுக்க நிறுவப்பட்ட கண்காணிப்புக் குழு தனக்குரிய அச்சொட்டான பணியை விட மனிதாபிமான மீறல்களைக் கணிப்பிடுவதிலேயே சிரத்தை எடுத்தது. ஓப்பந்த மீறல்களைப் பொறுத்த வரையில் அரசுமீது குற்றம் சார்த்த கண்காணிப்புக் குழுவிற்கு என்றுமே துணிச்சல் இருந்ததில்லை.
விதிகளைக் கடைப்பிடிக்குமாறு இரண்டு பிரிவினருக்கும் பொதுவாகப் போதகம் செய்யும் நழுவல் போக்கையே அது கடைப்பிடித்தது. தங்கு தடையின்றி அரசு குற்றம் புரிய இதுவே இடமளித்தது.
இன்னொன்றை நாம் இங்கே சுட்டிக்காட்டத் தவறக்கூடாது. ஐரோப்பித் தடையே அது.
விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் அது குற்றத் தண்டக் கறைச்சேறு பூசியது. போர் ஓய்வு ஒப்பந்தம் நிலைகுலைந்து போவதற்கு அடிநாதக் காரணமும் இதுவே. மறைமுகக் காரணமும் இதுவே.
பணி முடித்துப் பிரியும் கண்காணிப்புத் தலைவர் உல்வ் கென்றிக்சன் அவர்களும் நோர்வேயின் சிறப்பு அமைதித் தூதர் ஜோன் அன்சன் பவர் அவர்களும் இதையே நீதிவழி நின்று சுட்டிக்காட்டினார்கள்.
சம்பூர் கொடும்பிடுங்கலை அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு மீண்டும் கண்டிப்பதோடு சிறிலங்காவைச் சட்டத்தின் முன் நிறுத்துதற்கு வேண்டிய செவ்வையானதும் நீதியானதுமான நடவடிக்கையை அனைத்துலக சமுதாயம் மேற்கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் போர் ஓய்வு ஒப்பந்தம் கைநெகிழவிடப்படாது அதைக் காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டு நிற்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம.

செப்டம்பர் 6, 2006

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கூறியுள்ளதாவது:
சம்பூர் பிரதேசத்தை முழுமையாக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் கூற முடியாது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய நிலைமைகள் நீடித்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்வோம் என்றார் இளந்திரையன்.
“சம்பூர் ஆக்கிரமிப்பு தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களது முடிவுக்குப் பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும்” என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எதுவித பதிலும் தரவில்லை. கண்காணிப்புக் குழுவினர் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பதில் கிடைத்த பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றும் தயா மாஸ்டர் கூறினார்.
நன்றி>புதினம்.