செப்டம்பர் 2nd, 2006- ‍க்கானத் தொகுப்பு

புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடங்கியது

செப்டம்பர் 2, 2006

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது சிறிலங்கா அரசாங்கம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் கொழும்பில் உள்ள வங்கிகளுக்கு புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் சென்ற போதுதான் வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட விடயம் தெரியவந்தது.
சிறிலங்காவின் மத்திய வங்கியின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழக நிர்வாக இயக்குநர லோறன்ஸ் திலகர் இதனை உறுதி செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகளிலிருந்து மறு அறிவித்தல் வரும் வரை பணத்தை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் லோறன்ஸ் திலகர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு 1985 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு வங்கிக் கணக்குகள் முடக்கம் குறித்த எதுவித முன் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் லோறன்ஸ் திலகர் கூறினார்.
இத்தகைய நடவடிக்கையால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பணிகளும் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளும் பாதிக்கப்படும் என்றும் லோறன்ஸ் திலகர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ. 20 மில்லியன் தொகை இருருந்துள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதையடுத்து கொழும்பில் உள்ள தனியார் வங்கிகளுக்குச் சென்று அரசாங்கத்தின் உத்தரவு குறித்தும் தங்களது காசோலைகளை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சனவரி மாதம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்ற போது இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் புனர்வாழ்வுக் கழகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் காப்ரலிடம் விளக்கம் கேட்க தமிழர் புனர்வாழ்வுக் கழக சட்ட ஆலோசகர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
நன்றி>புதினம்.

வைகோ பேசியது சரியா தவறா?- க.சுப்பு

செப்டம்பர் 2, 2006

புலிகளை தீவிரவாதிகள் என்கிற காங்கிரஸ் கட்சி தீவிரவாத அமைப்புக்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா?
தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.
“விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியது சரியா? தவறா? என்ற தலைப்பில்” குமுதம் (06.09.06) இதழில் (பக் 20-24) வரை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அமைச்சருமான ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் ஆலோசகர் க. சுப்பு ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் க. சுப்பு கூறியுள்ளதாவது:
அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ வெளிப்படுத்திய உணர்வில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் கண்மூடித்தனமாக அடக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்தப் பொறுப்பான நடவடிக்கையும் இதுவரை இல்லை.
ஆனால் அங்கு வாழ்கிற கடைசித்தமிழன் வரை கொன்று குவிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் தாண்டவமாடுகிறது. இந்தக் கொடுமைகள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் வைகோ உள்பட எம் போன்றவர்களின் கருத்து. இதில் என்ன தவறு?
இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஒரே ஒரு இயக்கம் விடுதலைப் புலிகள்தான் என்பது வைகோவின் கருத்து. எனவே அதற்கு தார்மீக ஆதரவு தருகிறார். விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பினர் என்கின்றனர் காங்கிரஸ்காரர்கள்.
ஆனால் அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினால், இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகிறார்கள் என்கிறார்கள். கைது செய்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.
எதிரிகளைக் கொல்ல ஏ.கே. 47 துப்பாக்கியையும் ஏந்துவோம் என்று ஒருவர் பேசினால் உடனே ஏ.கே.47 துப்பாக்கியைக் கொண்டு அவர் சுட்டுத் தள்ளப் போகிறார் என்பது அர்த்தம் அல்ல. நமக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு வலிமை சேர்க்கும் வார்த்தைகளாகத்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய தீவிரவாதத்தை தூக்கிப் பிடிப்பதாகக் கருதக் கூடாது.
பகுத்தறிவுப் பிரச்சாரம் தமிழகத்தில் உச்சகட்டத்தில் இருந்தபோது பாரதிதாசன் பாடினார்,
சீரங்க நாதரையும
தில்லை நடராஜனையும
பீரங்கி வைத்து
பிளந்தெறிவது எந்தக் காலம்?
இந்த வரிகளை கருணாநிதி உள்பட எல்லோரும் அன்று தெருத்தெருவாகச் சொல்லி அலைந்தார்கள், யாரும் பாரதிதாசனைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.
தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும் என்றார் க. சுப்பு.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் முதல் தரக் குடிமக்களாகக் கருதப்பட வெண்டும்- சிங்கள மக்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தலாமே ஒழிய யாரையும் மிரட்டுகிற பாணியிலோ, சவால் விடும் பாணியிலோ பேசுவது பிரச்சனையைத் திரிக்க உதவாது என்பதே மக்கள் கருத்து கூறியுள்ளார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான காங்கிரஸ் கட்சியின் விமர்சன நிலைப்பாட்டையும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.