ஆகஸ்ட் 30th, 2006- ‍க்கானத் தொகுப்பு

தமிழ்நாடுமாநிலம் எமக்கு எதிராக உள்ளது-மகிந்த ராஜபக்ச.

ஆகஸ்ட் 30, 2006

சிறிலங்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரோனி பிளேயருடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்கள் நடத்துவதாக நோர்வே வானொலியான (என்.ஆர்.கே.பி1) தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரை மேற்கோள்காட்டி நோர்வே வானொலி இச்செய்தியைத் தெரிவித்துள்ளது.
ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி ஒலிபரப்பிய செய்தி விவரம்:
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண நோர்வே மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் கொள்கையாகக் கொண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருந்திருந்தால் சிறிலங்கா ஊடகங்களை நாளாந்த அடிப்படையில் அணுகிக் கொண்டிருப்போம்.
ஆனால் நாங்கள் இருதரப்பினரையும் சமதரப்பாக பாவிக்கிறோம். இருதரப்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தரப்பினர். இருவரையும் சமதரப்பாகத்தான் எங்களால் பாவிக்க முடியும்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச அளவில் தனிமைப்படுத்தக் கோரும் கொள்கையை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது எமது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது என்று ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி தெரிவித்துள்ளது.
மேலும், தனது அரசாங்கத்துக்கு எதிராக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் எதிராக உள்ள நிலையில் இனப்பிரச்சனையில் தனது அரசாங்கக் கொள்கைகளுக்கு ஆதரவாக இந்தியா செயற்படுவதற்காக இங்கிலாந்தின் உதவியை மகிந்த ராஜபக்ச கோரியதாகவும் நோர்வே வானொலி தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் வன்முறைக்கு எதிராக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்றும் நோர்வே வானொலியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

17 பேர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்:

ஆகஸ்ட் 30, 2006

மூதூரில் பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவத்தினரே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது.
இப்படுகொலை தொடர்பில் இன்று புதன்கிழமை கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் இடம்பெற்றுள்ளவை:
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், “இது படுகொலைச் சம்பவம்’ என்றும் “உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்” என்றும் கூறியுள்ளதாக அசோசியேற்றற் பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் பின்னணியில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவில்லை” என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
17 பணியாளர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணைகளைச சிறிலங்கா அரச அதிகாரிகள் தடுக்க முனைந்தனர் என்றும் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் அனைவருமே இராணுவத்தினர் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர் என்றும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
“பால்கன் நாடுகளில் இத்தகைய சம்பவங்களை சந்தித்த அனுபவம் உள்ளது” என்றும் இரு வாரங்களுக்கு முன்னதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறியுள்ளார்.
“மூதூர் பிரதேசம் முழுமைக்கும் எம்மைப் பார்வையிட இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏன்? பாதுகாப்புக் காரணங்களா? இல்லை. வேறு சில காரணங்கள்” என்றும் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
நன்ரி>புதினம்.

இந்தியாவின் அழைப்பை நிராகரித்தது இலங்கை.

ஆகஸ்ட் 30, 2006

மோதலை நிறுத்தும்படி கோரும் இந்தியாவின் அழைப்பு நிராகரிப்பு? சம்பூரைக் கைப்பற்றிய பின்னரே அரசு ஓயுமாம்

தற்போதைய மோதல்களை உடனடியாக நிறுத்தும்படி இந்தியாவும் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் விடுத்த அழைப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது எனவும் திருகோணமலைத் துறைமுகத்தின் பாது காப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சம்பூர்ப் பகுதியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்த பின்னரே ஓய்வது என்பதில் இலங்கை அரசு உறுதியாக இருக் கிறது எனவும் புதுடில்லியில் வெளியான செய்திகள் தெரிவித்தன.

இலங்கையில் தற்போதைய மோதல் களைத் தொடர்வதால் நீண்ட காலத்தில் ஏற் படக்கூடிய பின்னடைவுகள் தொடர்பாக இந்தி யாவும், அமெரிக்காவும் தத்தமது கவலையை நேரடியாகவும், வேறு வழிகளிலும் சம்பந் தப்பட்ட தரப்புகளுக்குத் தெரிவித்துவிட் டன. இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அத்தகவல் தெரி விக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்தக் கோரிக்கைகளைப் புறக் கணித்துவிட்டுத் திருகோணமலைக்கு அருகே புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சம்பூர்ப் பிரதேசத்தைக் கைப்பற்றும் தாக்குதல் நட வடிக்கை ஒன்றைக் கடந்த திங்களன்று முனைப்புடன் ஆரம்பித்து விட்டது இலங்கை.
புலிகள் சம்பூரில் நிலை கொண்டிருப்பது தமது திருகோணமலைத் துறைமுகத்துக்கு ஆபத்தானது என்றும்
ஆகவே, அதைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் எடுக்கும் இராணுவ நடவடிக்கையை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று சர்வதேச சமூகம் கருதக் கூடாது என்றும்
இலங்கை அரசுத் தரப்பில் வாதம் முன் வைக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சாரப்பட புதுடில்லி செய்தி வட் டாரங்கள் நேற்றுத் தகவல்களை வெளியிட் டன.

இணைப்பு : newstamilnet.com
Wednesday, 30 Aug 2006 USA

மீண்டும் எம்ஜிஆர்சிலைக்கு தார்பூசி கை உடைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 30, 2006

யாழ்ப்பாணம் பாசையூரில் சிறிலங்கா இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இருந்த எம்ஜிஆர் சிலை நேற்று தார்பூசி கை உடைக்கப்பட்டுள்ளது.

யாழ். வல்வெட்டித்துறை, குருநகர் ஆகிய இடங்களைத் தொடர்ந்து பாசையூரிலும் இந்த காட்டுமிராண்டிச் செயலை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலைகள் சேதப்படுத்துவது குறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.