ஆகஸ்ட் 27th, 2006- ‍க்கானத் தொகுப்பு

ஈழத்தமிழருக்கு என ஒரு குழுமம்.

ஆகஸ்ட் 27, 2006

வாருங்கள் நண்பர்களே, இது ஈழத்தமிழருக்கான ஒரு குழுமம். எமது எண்ணங்களை, எமது தேவைகளை, எமது விருப்புகளை பற்றி பேசுவோம். எமது தேசத்தின் விடியலுக்காக எம்மாலான அனைத்து முயற்சிகள் பற்றி பேசுவோம். வலைப்பதிவுகளின் பாதை, அதன் போக்கு, அதன் குறிக்கோள் பற்றி பேசுவோம். இணையத்தின்மூலம் இயன்றவரை செயற்படுவோம். சிறுதுருப்பையும் பெருஇருப்பாக்கி காட்டுவோம். தனித்தனியாக வலைபதித்த நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். தெரிந்ததை தெரிவிப்போம் தெரியாததை தெரிந்து கொள்வோம். அனைத்து வழிகளிலும் ஒன்றினைந்து எமது தேசத்தின் விடியலுக்கு வலுச்சேர்ப்போம்.
உணர்வாளர்கள், விருப்புடையோர்,எம்மீது நேசம்கொண்டோர் உங்கள் கருத்துக்களை கூற இங்கே சுட்டவும்.>http://groups.google.com/group/eelam1

நேசத்துடன்
இவன்
ஈழபாரதி.

இந்திய தேசிய கீதத்துக்கு அவமரியாதை.

ஆகஸ்ட் 27, 2006

சிறிலங்காவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கால் பந்தாட்டத்தில் இந்திய- சிறிலங்கா அணிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மோதின.

முன்பாக இந்திய வீரர்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை செய்வதற்காக அணிவகுத்து நின்றனர்.

அப்போது இந்திய தேசிய கீதம் தெளிவற்ற முறையில் ஒலிபரப்பப்பட்டது.

ஆனால் சிறிலங்காவின் தேசிய கீதம் சிறப்பான முறையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்று இந்திய தேசிய விளையாட்டுக் குழுச் செயலர் ஜீவன்ராம் சிரஸ்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளை நடத்தும் நாடு இப்படியாக கவனக்குறைவுடன் இருப்பது வேதனைக்குரியது என்றும் இது பற்றி தெற்காசிய சம்மேளனத்தில் தாங்கள் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டியில் இந்திய தேசிய கீதத்தை திட்டமிட்ட முறையில் குழப்பமான வகையில் ஒலிபரப்பியமையானது இந்திய வீரர்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்து சிறிலங்கா அணி வெற்றி பெறுவதற்காக திட்டமிட்ட ஒரு தந்திரோபாயமாக இருக்கலாம் என்றும் இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று சனிக்கிழமையான வரையான போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கங்களில் சதத்தை எட்டி தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது
நன்றி>புதினம்.

விடுதலைப் புலிகளின் உத்திகள்: இக்பால் அத்தாஸ்

ஆகஸ்ட் 27, 2006

யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சண்டே ரைம்ஸ்” வார இதழில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான இக்பால் அத்தாசின் கட்டுரையில் இது குறித்து இடம்பெற்றுள்ளவை:
கொழும்பில் உள்ள புலனாய்வு அமைப்புக்கள் மட்டுமின்றி சர்வதேச புலனாய்வு அமைப்புக்களின் மத்தியிலும் பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது சில வளங்களை இந்த சமரில் பயன்படுத்தவில்லை? என்பதுதான் அந்த கேள்வி. அது தொடர்பிலான சில விடயங்கள் இன்னமும் தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளன.
- இரணைமடு நீர்த்தேக்கம் அருகே 1.4 கிலோ மீற்றர் நீளமுள்ள விமானத் தளத்தை விடுதலைப் புலிகள் அமைத்திருப்பதாக கூறியிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 5 இலகு ரக விமானங்கள் இருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு அமைப்பு ஒன்று உறுதி செய்து சிறிலங்கா அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. வான்வழி தற்கொலைத் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்தக் கூடும் என்ற அச்சமும் உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் அதனை பாவிக்கவில்லை.
- தரையிலிருந்து வானில் சென்று தாக்குதல் நடத்தும் ரஸ்ய தயாரிப்பான எஸ்.ஏ.7 என்ற ஏவுகணை விடுதலைப் புலிகளிடம் உள்ளது. மூன்றாம் ஈழப் போரில் சிறிலங்கா விமானப் படையின் பயணிகள் விமானத்தை 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கியபோது இது பயன்படுத்தப்பட்டது. இந்த ரக ஏவுகணைளின் பயன்பாட்டுக்காலம் குறைவானதுதன். அப்படியான நிலையில் அண்மையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தனி என்பவர் விடுதலைப் புலிகளிடம் இத்தகைய ஏவுகணைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
- தங்களது விமானத் தளத்தைப் பாதுகாப்பதற்கான விமானப் படை பாதுகாப்பு சாதனங்களை விடுதலைப் புலிகள் வைத்திருப்பதாக கடந்த ஆண்டு எழுதியிருந்தோம். இரணைமடு விமானத் தளத்துக்கு மேலாக 3 விதமான உலங்குவானூர்திகள் ஏவுகணைகளுடன் பறந்த நிலையில் இது தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஏ.7 தரையிலிருந்து வானை நோக்கித் தாக்குதல் ஏவுகணையானது விரைந்து சென்று தாக்காது என்பதால் அமெரிக்காவில் எஸ்.ஏ.18 ரக ஏவுகணைகளை வாங்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் விமானத் தளத்தில் பயன்படுத்தப்படும் பல தளபாடங்கள் குறித்தும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் விடுதலைப் புலிகள் ஏன் விமான தளத்தை பயன்படுத்தவில்லை?
- விடுதலைப் புலிகளின் பலமாக உள்ள கடற்புலிகள் தற்போதைய சமரில் பெருந்தொகையில் பயன்படுத்தப்படவில்லை. சிறிலங்கா விமானப் படையின் தாக்குதல் காரணமாகவா? அல்லது திட்டமிட்ட வகையில் நகர்த்தப்பட்டுள்ளனரா?
- ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் ஓகஸ்ட் 18 ஆம் நாள் வரை 14 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் 141 சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். குடாநாட்டில் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 2 அதிகாரிகள் மற்றும் 21 இராணுவத்தினர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 43 அதிகாரிகள் மற்றும் 685 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டு சமரில் 12 அதிகாரிகளும் 28 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
யூலை 26 ஆம் நாள் முதல் நேற்று சனிக்கிழமை வரை மொத்தம் 278 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த 246 பேர்- கடற்படையில் 9- விமானப் படையில் 2- காவல்துறையில் 14- ஊர்காவல் படையில் 7. யாழ். சமரில் 800 போராளிகள் இறந்தனர் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுயாதீனமாக விசாரித்தமையில் இந்த எண்ணிக்கை சாத்தியமற்றது என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

இந்தியாவின் கவலை.

ஆகஸ்ட் 27, 2006

சிறிலங்காவில் பாகிஸ்தனிய ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறித்து நோர்வேயிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் நாளன்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கார் ஸ்டொரை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சியாம் சரண் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது இலங்கை நிலைமைகள் குறித்தும் சிறிலங்காவில் பாகிஸ்தானிய ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை தொடர்பான இந்திய புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதுவராக விமானப் படையின் பிரதி தளபதி நியமிக்கப்படுவது குறித்த தனது அதிருப்தியையும் நோர்வேயிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை போர் நிலைமைகள் குறித்து எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடன் சியாம் சரண் ஆலோசனை நடத்தினார். மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மூன்று நாள் போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான அகதிகளின் வருகையானது தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே ஒரு அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் நோர்வேத் தரப்பினரிடம் சியாம் சரண் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அமைதி முயற்சிகளில் தென்னிலங்கையின் ஒருமித்த கருத்து உருவாவதற்காக ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியையும் மகிந்தவின் சுதந்திரக் கட்சியையும் இணைந்து செயற்பட வைக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வழமையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள “சம்பூர்” குறித்த சிறிலங்காவின் அச்சத்தை நோர்வேத் தரப்பினர் இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் விலகிக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலைமையில் பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 3 நாள் போர் நிறுத்தத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நோர்வேத் தரப்பினர் தெரிவித்தனர்.
சியாம் சரணின் நோர்வே பயணத்தின் போது ஓஸ்லோவில் தங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேசியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு நடைபெற்று வந்த நிலையில் புதுடில்லியில் இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம் சந்தித்துப் பேசினார். இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அகமதுவையும் இந்திய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களையும் ஹக்கீம் சந்தித்துப் பேசினார்.
நன்றி>புதினம்.