ஆகஸ்ட் 23rd, 2006- ‍க்கானத் தொகுப்பு

எம்மை சுதந்திரமாக செல்ல விடுங்கள்.

ஆகஸ்ட் 23, 2006

எமது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் எம்மைச் சுதந்திரமாக செல்லவிடுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்திற்கு சம்பூரால் ஆபத்து என்ற சிறிலங்கா அரச தலைவரின் கூற்றை ஏற்கமுடியாது. திருகோணமலை துறைமுகத்தை பாதுகாப்பதில் ஏனையவர்களை விட தமிழர்களுக்கே அதிக அக்கறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு-கிழக்கு நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
அரசாங்கத்தால் வடக்கு-கிழக்கு மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் கூறிவிடுங்கள். எங்களை தனியாக செல்ல இடமளியுங்கள். அதனைவிடுத்து தமிழ்மக்களைப் பற்றி அவமானமாக பேசுவதனை நிறுத்துங்கள். ஜே.வி.பியின் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் மிகவும் அவமானமாகப் பேசினர்.
தற்போது வடக்கு-கிழக்கில் பாரிய மனித நேயப் பிரச்சனை இருக்கின்றது. பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். விமானத்தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலெறித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. தனிநபர்களும் கொல்லப்படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் ஆகியோரும் கொல்லப்படுகின்றனர். தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்றனர் என்பதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது.
இது என்ன நியாயம்?
முல்லைத்தீவில் மாணவிகள் கிபீh தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர். இது என்ன நியாயம்?
சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுகின்றது. யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொலை செய்யப்படக்கூடாது. இவ்விடயம் தொடர்பாக ஐ.நா. இணைத்தலைமை நாடுகள் மற்றும் இந்தியா என்பன கரிசணையுடன் செயற்பட வேண்டும். அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகளை மீறி வருகின்றது. சர்வதேச சமூகம் புலிகளை மட்டுமே விமர்சிக்கின்றது.
விமானக் குண்டுவீச்சுக்களை மேற்கொண்டவாறு அரச தரப்பும் யுத்தத்தில் ஈடுபடுவதனையும் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்க முடியாது.
எதிர்த்தாக்குதல்களை மட்டுமே மேற்கொள்வதாக அரசாங்கம் கூறவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அண்மையில் அரசசார்பற்ற நிறுவனமொன்றின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இடத்திற்கு கண்காணிப்புக்குழுவினரும் ஊடகவியலாளர்களும் செல்வதற்கு ஏன் அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார். இது வெறும் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது. அவுஸ்திரேலியா அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை விடுகின்றோம். அரசசார்பற்ற நிறுவன ஊழியர்களின் கொலை தொடர்பாக உண்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும்.
சம்பூர் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமாகும். சம்பூரில் புலிகள் இருக்கின்றனர் என்பதற்காக அங்கு விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடாது.
ஜே.வி.பி.யினரே வழி நடத்துகின்றனர்.
ஜே.வி.பி. உறுப்பினர்களே இன்று அரசாங்கத்தை வழிநடத்துவதாகத் தெரிகின்றது. ஜே.வி.பி.யினருக்கு திருகோணமலையில் எந்தவிதமான மக்கள் செல்வாக்கும் இல்லை. எனவே ஜே.வி.பி.யினர் தமது நிலைப்பாட்டுக்கு மேல் அதிகாரம் செலுத்த முற்படக்கூடாது.

ஆதாரம்: வீரகேசரி.

அருட்தந்தையை காணவில்லை.

ஆகஸ்ட் 23, 2006

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்திரு ஜிம் பிறெளன் மற்றும் அவரது உதவியாளரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது.
அருட்திரு ஜிம் பிறெளன் அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக ஒருவாரத்துக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறெளன் தனது உதவியாளருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போய் உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்காகன பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை. இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிரௌன்.

பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39).
அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாக சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்.
சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார்.
நன்றி>புதினம்.

தேசியத் தலைவர் அறிவிப்பு.

ஆகஸ்ட் 23, 2006

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழில் வெளிவரும் “நமது ஈழநாடு” நாளேட்டின் நிர்வாக இயக்குநருமான சின்னத்தம்பி சிவமகாராஜாவுக்கு தமிழீழத்தின் அதி உயர் தேசிய விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் சிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். தமிழிழன விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்து விட்டது. எதிரியின் கோரமான தாக்குதலுக்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார். இந்த இலட்சிய மனிதரை இழந்து எமது தேசம் இன்று ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கிறது.
திரு.சின்னத்தம்பி சிவமகாராசா அவர்கள் அரசியற் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல மனிதர். அசாத்தியமான குணவியல்புகள் கொண்டவர். எளிமையும் இனிமையும் இணைந்த ஒரு இனிய மனிதர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்வார். அனைவரையும் கவர்ந்துகொண்ட ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியும் சமூகசேவையானருமாவார்.
இவர் ஒரு சிறந்த தேசபக்தர். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர். தமிழரின் வாழ்வு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலை பெற்று, சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரித்துக்கொண்டார். இந்த இலட்சியப்பற்று அவரை எமது விடுதலை இயக்கத்தோடும் இறுகப்பிணைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் போராட்ட இலட்சியத்தையும் முழுமையாக நேசித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தார்.
அரசியல், ஆன்மீகம், கூட்டுறவு, ஊடகம் எனப் பல்வேறு பெரும் தளங்களில் இவர் செயற்பட்டார். இவரது செயற்றளம் அகன்று விரிந்திருந்தது. யாழ் மண்ணோடும் அந்த மண்ணில் மக்களோடும் ஒன்றியதாக அவரது வாழ்வு சுற்றித்திரிந்தது. எதிரியின் அகோர ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுள்ள யாழ் மண்ணில் நின்றவாறு, எதிரியின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அசைந்துகொடுக்காமல் யாழ் மக்களுக்கு என்றுமே காப்பரணாக நின்றார். போர் நெருக்கடிமிக்க நாட்களில் அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்தார். ஆக்கிரமிப்புப் படைகளின் அழிவுகளையும் அட்டூழியங்களையும் நெஞ்சுறுதியுடனும் நேர்மைத்திறனுடனும் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். மக்களிடத்தில் விடுதலை உணர்வையும் தேசப்பற்றையும் தட்டியெழுப்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக யாழ் மண்ணில் நமது ஈழநாடு என்ற பத்திரிகையை ஆரம்பித்து, அப் பத்திரிகையின் நிர்வாக இயக்குனராக இருந்து அந்தப் பத்திரிகையின் இன்றைய வளர்ச்சிக்குப் பங்களித்தார். இவர் ஆரவாரமின்றி அமைதியாக ஆற்றிய மக்கள்பணி அளப்பரியது.
திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியை கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமயடைகின்றேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. அவர்கள் எமது தேச ஆன்மாவில் என்றும் நீங்காத நினைவுகளாக காலமெல்லாம் நிலைத்திருப்பார்கள்.
“புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம்”
வே.பிரபாகரன்.
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள
நன்றி>புதினம்.

பயந்தது சிங்களம், யாழ்ராணுவத்தைமீட்க புதியதந்திரம்.

ஆகஸ்ட் 23, 2006

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு மேசைக்கு தாம் தயார் என்றும் அதற்கு சாதகமான பதிலை அளித்து, கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை நடத்த வருமாறு இச்செய்தியில் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளிள் இணைத்தலைமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரிடம் இந்த கோரிக்கையை மகிந்த விடுத்ததாகவும் நோர்வே அமைச்சரும் நோர்வேயின் சிறிலங்காவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு மேற்படி செய்தியை தெரிவிக்குமாறும் அவர் பிறட்ஸ்கரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகிறது.
அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கத் தயார் என்ற தமது தரப்பின் நிலைப்பாட்டை அரசுத்தலைவர் என்ற ரீதியில் தான் வெளியிட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்தும் தமது தரப்பிற்கு சம அந்தஸ்துள்ள அதன் தலைவர் பிரபாகரனிடமிருந்து இதற்கு பதில் வரவேண்டுமே தவிர அந்த அமைப்பின் ஏனைய தலைவர்களிடமிருந்து இதற்கு பதிலை எதிர்பார்க்கவில்லை என்றும் மகிந்த தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவின் இச்செய்தியை அமைச்சர் சொல்ஹெய்மிடம் தெரிவிப்பதற்காக திங்களன்றே தூதுவர் பிறட்ஸ்கர் நோர்வே விரைந்தார்.
நன்றி>புதினம்