ஆகஸ்ட் 22nd, 2006- ‍க்கானத் தொகுப்பு

மறைகழன்று புளுகுகிறான் சரத் பொன்சேகா.

ஆகஸ்ட் 22, 2006

தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான செயற்பாடாக உள்ளது.
விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளனர். அவர்களை முற்றாக அழிப்பதற்கு இன்னும் சொற்ப காலமே தேவை. மாவிலாறு தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடுத்த நாளிலிருந்து இன்றுவரை, அவர்களது ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளை நமது படைகள் அழித்துவிட்டன. இப்போது புலிகளின் படையில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள், சிறுவர்களே.
புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் முகாம் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு காட்டுக்குள் இருந்த முகாமொன்றில், படையில் சேரும் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போதே நாம் தாக்குதல் நடத்தினோம். அதில் 300-க்கும் அதிகமான சிறு வயதுப் போராளிகள் கொல்லப்பட்டனர். ஆனால், அங்கிருந்து ஏராளமான போராளிகளின் உடல்களை புலிகள் வேகமாக அகற்றிவிட்டனர்.
மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் பாடசாலை சிறுமிகள் ஏன் தங்கியிருக்க வேண்டும்? அவர்களிடம் துப்பாக்கி ஏன் இருக்க வேண்டும்? ஆயுதக்கிடங்கு அங்கே எப்படி வந்தது? அதனால், இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சியே இடம்பெற்றது. சிறிலங்காப் படைகளின் தாக்குதலை யாரும் குற்றம் சொல்ல முடியாது.
தெல்லிப்பழையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி சிவமகாராஜா சுடப்பட்டார் என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது. எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணியளவில், அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே அவரைச் சுட்டார்கள்.
தற்போது இராணுவ தரப்பில் கிடைத்துள்ள உயர்மட்ட தகவல்களின்படி, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பல உறுப்பினர்கள் விலகி, இராணுவ முகாம்களிலும் சோதனைச் சாவடிகளிலும் சரணடைகிறார்கள் என்றார் சரத் பொன்சேகா.
ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாக்குதல்கள் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை, படைத்தரப்பில் 131 படையினர் கொல்லப்பட்டதுடன், 1,75 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தினார். இராணுவத்தினர், தங்களது நிலைகளை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வப்போது விடுதலைப் புலிகள் ஆட்டிலெறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை, தள்ளாடியிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதக் களஞ்சியமொன்றை தங்களது விமானக் குண்டுவீச்சில் அழித்துள்ளதாக, விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சில்வா தெரிவித்தார்.

எமது படைகள் வலிந்த தாக்குதலில் ஈடுபடவில்லை. தற்காப்பு நடவடிக்கைகளையும் பதில் தாக்குதல்களையுமே மேற்கொண்டு வருகிறோம் என்று மேலும் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

புலிகளின் சர்வதேச தொடர்பாளராக நோர்வே செயற்படுகிறது:

ஆகஸ்ட் 22, 2006

சர்வதேச தொடர்பாளர்களாகவும், சர்வதேச தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாகவும், விடுதலைப் புலிகளின் நேரடி உதவியாளர்களாக நோர்வே நாட்டினர் செயற்படுகின்றனர் என்று ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தவறானது என்று ஹன்சன் பெளயர் கூறியிருப்பதன் மூலம், நோர்வேயின் இந்த இரகசிய புலிகள் ஆதரவு வெளிப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்தது.
விடுதலைப் புலிகள் பலவீனப்படும் போது உடனடியாக அவர்களைக் காப்பாற்ற நோர்வே வந்து விடுவதைப் பார்க்க முடிகிறது என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்வதற்கு முயற்சிக்கும்போதே அதை நோர்வே எதிர்த்து வந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், விடுதலைப் புலிகளின் அபிலாசைகளுக்கு இணங்க நோர்வே செயற்படுகிறது என்பதை சிறிலங்கா அரசு புரிந்துகொண்டு, நோர்வேயின் அனுசரணைப் பணியை நிராகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி>புதினம்.

சிறிலங்காவுக்கு எதிராக தடை விதியுங்கள்.

ஆகஸ்ட் 22, 2006





சிறிலங்காவுக்கு எதிராக தடை விதிக்குமாறு சுவிஸ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை
“தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளைக் கண்டித்து சிறிலங்காவுக்கு எதிரான தடைகளை விதிக்குமாறு” சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக சுவிசின் மாநிலங்கள் தழுவிய ரீதியாக நடைபெற்று வந்த “சாவிலும் வாழ்வோம்” கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் இக்கோரிக்கையை விடுத்தனர்.

சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (21.08.06) நண்பகல் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர்.

சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுவிஸ் நாட்டுப் பிரஜைகள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுவிஸ் நாட்டின் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை அமைப்பின் செயலாளர் எஸ்.கிருபாகரன் உட்பட மதத்தலைவர்கள், இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாவது:

“எத்தனை நாடுகள் தடைகளை விதித்தாலும் அந்த தடைகள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு எமது விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்லும்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையின் கீழ்தான் ஒன்று பட்டு இருக்கிறார்கள்” என்றார் அவர்.

“சில விசமிகள் செய்யும் பிரசாரங்களை கண்டு யாரும் அவநம்பிக்கை கொள்ளத்தேவையில்லை” என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி இந்நிகழ்வில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் சுவிஸ் அரசிடம் கையளிக்கப்பட்டது.

அம் மனுவில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

1. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தாயகம் மற்றும் தேசியத்தை அங்கீகரியுங்கள்

2. தமிழீழ விடுதலைப் புலிகளை எங்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அங்கீகரியுங்கள்

3. சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை நிறுத்துங்கள்

4. தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளை கண்டியுங்கள்

5. சிறிலங்கா அரசுக்கு எதிராக தடைகளை விதியுங்கள்

6. இடப்பெயர்வுக்கும் அச்சம்கொண்ட வாழ்விற்கும் முற்றுப்புள்ளி வையுங்கள்

7. சிறிலங்கா அரசின் பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்

8. எங்கள் தாகம் தமிழீழத் தாயகம்

9. சுவிசுக்கு ஈழத் தமிழர்களின் மனிதாபிமான அவல நிலையை போக்க காத்திரமான பாத்திரத்தை வகிக்க முன்வாருங்கள்

தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக சுவிஸ் கல்வி சார் சமூகத்தை அறிவூட்டும் செயற்திட்டமும், இளையோ அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது.

இணைப்பு : newstamilnet.com
Tuesday, 22 Aug 2006 USA