யாழ். தென்மராட்சி முகமாலைப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலை முறியடித்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 485 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
களமுனையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
485 படையினர் கொல்லப்பட்டும் 1,250 படையினர் காயமடைந்தும் களமுனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் 88 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (11.08.06) படையினர் தமது வலிந்த தாக்குதலை பெருமெடுப்பில் மேற்கொண்டனர்.
இந்த வலிந்த தாக்குதல்களில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் டிவிசன்களான 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்களும் 55 ஆம் டிவிசன் தாக்குதல் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன.
விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களில் இந்த டிவிசன்கள் கடும் சேதங்களை சந்தித்தன.
வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு கடும் சேதங்களை சந்தித்த இந்த டிவிசன் படையணிகள் களமுனையிலிருந்து பின் நகர்த்தப்பட்டன.
முன்னரங்கில் ஏனைய படைப்பிரிவுகளின் பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏ – 09 சாலை வழியே நேற்று வெள்ளிக்கிழமை முன்னகர்வை படையினர் மேற்கொண்ட போது விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கடும் சேதங்களை சந்தித்து தமது நிலைகளுக்குப் பின்வாங்கினர்.
இந்த தாக்குதலில் புதிததாக கஜபா றெஜிமன்ட் படையணியை சிறிலங்காப் படை இறக்கியது. இந்த அணி நேற்றைய சமரில் கடும் இழப்புகளைச் சந்தித்தது.
கடந்த வெள்ளிமுதல் இதுவரையான வலிந்த தாக்குதல்களில் கடும் சேதங்களை சந்தித்துள்ள 53 ஆம் 55 ஆம் டிவிசன்கள்தான் சிறிலங்காப் படையின் களமுனையில் ஈடுபடுத்தப்பட்ட வலிந்த தாக்குதல் படையணிகளாகும்.
நன்றி
ஆகஸ்ட் 19th, 2006- க்கானத் தொகுப்பு
யாழ். சமரில் 485 படையினர் பலி- 1,250 பேர் காயம்.
ஆகஸ்ட் 19, 2006தவறென்றால் அந்ததவறை தொடர்ந்து செய்வோம்: கருணாநிதி
ஆகஸ்ட் 19, 2006முல்லைத்தீவு படுகொலையைக் கண்டிக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் தவறு என்றால் தமிழன் கொல்லப்படுவதை இன்னொரு தமிழன் கண்டிப்பது தவறு என்றால் அந்த தவறை தமிழன் தொடர்ந்து செய்வான் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று சனிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் ம.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் கண்ணப்பன் ஒரு பிரச்சனையை எழுப்பினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 14 ஆம் திகதி இலங்கை இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது குறித்து இரங்கல் தீர்மானம் 16 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. யூகத்தின் அடிப்படையிலும், திரித்து கூறப்பட்ட செய்தியின் அடிப்படை யிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக விஷமத்தனமாக இலங்கை துணை தூதரக அதிகாரி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் புஷ்ஷின் சிறப்பு தூதர் இலங்கைக்கு சென்று அந்நாட்டின் அதிபரை 2 மணி நேரம் சந்தித்து பேசியிருக்கிறார். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஏராளமான ஆயுதங்களை இலங்கை அரசுக்கு வழங்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. இலங்கையிலேயே தங்கி, அதற்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. திருகோணமலையை இந்துமாக் கடலின் வழியாக்கி, அதில் காலூன்ற முன்பு அமெரிக்க முயற்சி செய்த போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடும் எச்சரிக்கை செய்ததால் அமெரிக்காவின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அங்கு காலூன்ற அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பூகோள நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக 1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் நடந்த போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவையும், செயலாளராக இருந்த ஜி. பார்த்தசாரதியையும் இலங்கைக்கு அனுப்பி இந்திரா காந்தி எச்சரிக்கை செய்தார். அதனால் இனக்கலவரம் முடிவுக்கு வந்தது.
ஆனால் இப்போது மத்திய அரசு இது போன்ற கண்டிப்பை இலங்கை அரசிடம் காட்டவில்லை என்பது வேதனையாக உள்ளது. மாறாக இலங்கைக்கு இராணுவ உதவி மற்றும் ரேடார் உதவி வழங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழர்களை கூண்டோடு ஒழிக்க அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கு இந்தியா ஒருபோதும் உதவி செய்யக்கூடாது. திருகோணமலையில் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டைஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவற்ற சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
எனவே அவர்களுக்கு உயிர்காக்கும் மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை அனுப்பி பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார் கண்ணப்பன். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது:
ம.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் கண்ணப்பன் எழுப்பிய பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை. இது போன்ற பிரச்சனைகளில் எந்த அளவுகோளை கொண்டு நாம் தீர்மானிப்பது, விமர்சிப்பது என்பதற்கு ஒரு நிலை உள்ளது. பொதுவாக இலங்கை பிரச்சனை, குறிப்பாக தமிழர் பிரச்சனை, வெகு சிறப்பாக ஈழத்தமிழர் பிரச்சனையை அணுகுவதற்கு 2 கால கட்டம் உள்ளது. ஒன்று ராஜீவ் காந்திக்கு முன்பு, மற்றொன்று அதற்கு பின்பு.
1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் மரியாதை நிமித்தம் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து பேச டெல்லி சென்றேன். அப்போது என்னுடன் முரசொலி மாறனும் வந்திருந்தார். ராஜீவ் காந்தியை சந்தித்து 5 நிமிடம் பேசி முடித்து விட்டு சென்னை திரும்ப மாலையிலேயே விமான டிக்கெட் தயாராக இருந்தது. ஆனால் மரியாதை நிமித்தம் பேசிய பிறகு இலங்கை பிரச்சனை பற்றி ராஜீவ் என்னுடன் பேசினார்.
நீங்கள் முன்னின்று இந்த பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என்று அப்போது அவர் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போது வைகோவும் எங்களுடன் (தி.மு.கவில்) இருந்தார். மாறனை அழைத்து கொண்டோ, வைகோவை அழைத்து கொண்டோ அல்லது இருவரையும் சேர்த்து அழைத்து கொண்டோ இலங்கைக்கு சென்று அங்கிருந்து வவுனியா சென்று பிரபாகரனை சந்தித்து பேசி இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று ராஜீவ் என்னிடம் சொன்னார்.
அதற்கு வேண்டிய விமானம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக அவர் தெரிவித்தார். நீங்கள் உடனடியாக சென்னைக்கு சென்று எந்த திகதியில் இலங்கைக்கு செல்கிறீர்கள் என்று பதில் அனுப்பும்படியும் பணித்தார். மறுநாள் காலை டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நட்வர்சிங்கை அனுப்பி என்னிடம் பேசச் சொன்னார். நீண்டநேரம் நட்வர்சிங் என்னிடம் இலங்கை பிரச்சனை குறித்து விவாதித்து அந்த விவரங்களை பிரதமரிடம் எடுத்து கூறியுள்ளார்.
பகல் 2.30 மணிக்கு மீண்டும் ராஜீவ் காந்தி என்னை அழைத்து நீங்கள் பேசிய விவரங்களை அறிந்து கொண்டேன். முன்பு கேட்டு கொண்டபடி நீங்கள் இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். அப்போது அவர் பிரபாகரனை பெரிதும் புகழ்ந்தார். அவரது வீரத்திற்கு இணையே இல்லை என்று கூறினார். எனக்கே அப்போது ஆச்சர்யமாக இருந்தது. பேச்சை முடித்து கொண்டு நான் சென்னை திரும்பி இலங்கை செல்ல ஏற்பாடுகளை செய்ய முயன்ற போது வைகோ எனக்கு தெரியாமல் வேறு வழியில் இலங்கை சென்று விட்டார்.
அப்போது இலங்கைக்கு செல்வது பிரதான வழி அதுவல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வழியாக அவர் இலங்கை சென்று விட்டார். எனவே நான் மீண்டும் டெல்லி சென்று ராஜீவிடம் வைகோ சென்ற விஷயம் குறித்து வருத்தம் தெரிவித்தேன். அப்போது மாநிலங்களவையில் இந்த பிரச்சனை எழுந்த போது பிரதமர் ராஜீவ் காந்தி, அவர் எந்த வழியில் சென்றார் என்பது முக்கியமல்ல. அவர் பத்திரமாக திரும்பினாலே போதும் என்று கூறினார். அதற்கு பிறகு என்னென்னவோ நடந்து விட்டன.
அதன் பிறகு ஒருமுறை வேறு நாட்டுக்கு செல்ல சென்னை வந்த ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் தங்கியிருந்த போது என்னை அங்கு வருமாறு பணித்தார். வாக்குறுதி பற்றி நான் நடக்க முடியாத விஷயத்தை கூறி அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். அப்போது வைகோ விஷயத்தால் தான் இதில் தேக்கம் ஏற்பட்டது என்று நான் அவரிடம் கூறவில்லை. கவலைப்படாதீர்கள், பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கையை தொடருவோம் என்று ராஜீவ் காந்தி சொன்னார்.
ஆனால் அது தொடர முடியாமல் போனது. அதற்குள் இலங்கையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு தமிழீழப் போராட்டத்திற்கு ஒரு தடங்கல் உருவானது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் இரத்தம் சிந்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு பின்பு இந்திய மக்களிடையே அதுவரை இருந்து வந்த அனுதாபம், எழுச்சி, உணர்வு, வேகம் ஆகியவை எந்த அளவுக்கு மாய்ந்து போனது என நான் கூற தேவையில்லை.
அதனால் தான் நான் கி.மு., கி.பி. என்பதை போல ராஜீவ் காந்திக்கு முன்பு, ராஜீவ் காந்திக்கு பின்பு என பிரித்து பார்க்க வேண்டும் என கூறினேன். இருந்தாலும் இலங்கை தமிழர்களுடன் நமக்குள்ள உறவு தொப்புள் கொடி உறவாகும். நம் இனமக்கள் கொல்லப்படுவது நமக்கு இனிப்பான விஷயமல்ல. கணைக் கொண்டு தாக்குவதைவிட மோசமான விஷயமாகும். ஆனால், சில சூழ்நிலைகள் காரணமாக இவற்றை தாங்கி கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
எனவே, இந்த அடிப்படையில் தான் பிரச்சனையை அணுக வேண்டிய நிலையுள்ளது. தமிழ் மாணவிகள் குண்டு வீசி கொல்லப்பட்டது குறித்து இந்த சட்டசபையில் அனுதாப தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன ஒற்றுமை விஷயத்தில் தமிழர்கள் ஒன்றுபடுவார்கள் என்பதற்கு அது ஒன்றே சான்றாகும். இது தவறான தீர்மான என்பது போல் இன்றைய பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழன் கொல்லப்படுவதை இன்னொரு தமிழன் கண்டிப்பது தவறு என்றால் அந்த தவறை தமிழன் தொடர்ந்து செய்வான். எனவே இது தவறான தீர்மானம் அல்ல. குண்டு வீசப்பட்டது குழந்தைகள் காப்பகம் மீது அல்ல அது பயிற்சி முகாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது கொல்லப்பட்டவர்கள் இளம்சிறார்கள் என்பது புரியும். பத்திரிகையில் வெளியான சமாதான அறிக்கையில் கூட இலங்கை அரசின் கவனத்தை கவர கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆம், கவனத்தை கவருவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தான். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இறந்த குழந்தைகள் பிழைத்து விடப்போவதில்லை. நடந்த கொடுமையை கண்டிக்கிறோம். அதேசமயம் இதை வேடிக்கை பார்க்க கூடாது என்பதை சுட்டிக்காட்டுவதே எந்த தீர்மானத்தின் நோக்கமாகும். எனவே இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கை எடுப்பதை மத்திய அரசுக்கு விட்டு, விட்டு அவர்கள் இதை கவனிப் பார்க்கள் என்ற அளவோடு இந்த விஷயத்தை முடிக்கலாம் என கருதுகிறேன் என்றார் அவர்.
நன்றி>புதினம்.
சென்னை சிறிலங்காதூதரகம் முற்றுகை: 150 மாணவர்கள்கைது.
ஆகஸ்ட் 19, 2006சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அகில இந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் லெனின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
முல்லைத்தீவு படுகொலையானது ஒரு அரச பயங்கரவாதச் செயல். மிகக் கொடூரமான அந்தப் படுகொலையைச் செய்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொய்ச்செய்திகளை சிறிலங்கா துணைத் தூதுவர் வெளியிட்டு வருவதை எப்படி சகிக்க முடியும்?
ஆகவே எமது மாணவர் பெருமன்றம் சார்பாக இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம் என்றனர்.
சிறிலங்காவில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதைக் கண்டித்தும், இனப்படுகொலையைத் தடுக்க இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்றும் பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்தும் சிறிலங்கா தூதரகங்களை மூட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நன்றி>புதினம்.
ஐ.நா. உப மனித ஆணைக்குழுவில் முல்லைப் படுகொலை.
ஆகஸ்ட் 19, 2006ஐக்கிய நாடுகள் சபையின் உப மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் “சர்வதேச சர்வ நம்பிக்கை” என்ற சுவிஸ் நாட்டை தளமாக கொணடு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சிறிலங்கா அரசின் கடந்த கால படுகொலைகளை சமர்ப்பித்துள்ளது.
சுவிஸ் ஜெனீவாவில் நேற்று வெள்ளிக்கிழமை (18.08.06) நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுவிஸ் நாட்டை தளமாகக்கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சார்பாக திருமதி டியெற்றி மக்கோணால் அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றினார்.
அவர் தனதுரையில் கூறியதாவது:
“இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்கள அரசுகளினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அடக்குமுறை, இன வேறுபாடு காட்டும் சட்டங்களுடன் கூடிய காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளுக்கு, தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட 35 வருடகால சாத்வீகப் போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளாரின் அரச பயங்கரவாதத்தினால் வலுவிழக்கச் செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்தத் தீவில் 1983 ஆம் ஆண்டு முதல் தமிழீழ மக்களின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம் உருவாகியது.
“இந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம், இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயக பூமியான வடக்கு-கிழக்கில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுக்கான நிர்வாகம் அவர்களது தாயக பூமியின் 70 வீதமான பிரதேசத்தில் உருவாகியுள்ளது.
“கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர், உலகின் பல பாகங்களிலிருந்தும் பல நாட்டின் முக்கிய புள்ளிகளும், இராஜதந்திரிகளும் தமிழர்களுக்கான நிர்வாகப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
“இன்று சிறப்பாக கடந்த நவம்பர் மாதம் முதல் இலங்கைத்தீவில் நடப்பவை அதிர்ச்சிக்கும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் உரியவை.
“கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறிலங்கா அரசு விமானத்தாக்குதலை ஆரம்பித்த காரணத்தினால், இடையிடையே சிறு, சிறு மீறல்களுடன் நடைமுறையிலிருந்து வந்த யுத்த நிறுத்த உடன்படிக்யை சிறிலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ளது.
“கடந்த சில தினங்களாக சிறிலங்கா அரசினால் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ, விமானத் தாக்குதலினல் ஏறக்குறைய 60,000 தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தும், மனிதாபிமான வேலைகளில் ஈடுபடுவோர் 18 பேர் கொல்லப்பட்டும் 700-க்கும் மேற்பட்டொர் படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். கடந்த சில தினங்களாக உக்கிரமான யுத்தம் வடக்கு-கிழக்கில் நடைபெறுகின்றது.
“கடந்த திங்கட்கிழமை (14.08.06) முல்லைத்தீவு என்னும் இடத்தில் நடைபெற்ற கொடூர சம்பவத்தை, இந்த உப மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கு மிக அதிர்ச்சியுடனும் கவலையுடனும் கொண்டுவர விரும்புகிறேன்.
“முல்லைதீவு மாவட்டத்தில் முதலுதவி பயிற்சி வகுப்புக்களில் ஈடுபட்டிருந்த 15 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மணவிகள் சிறிலங்கா அரசின் விமானத் தாக்குதலுக்கு இலக்காகினர். இதில் 61 மாணவிகள் பலியாகியும் 129 மாணவிகள் மிகவும் மோசமான படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை, சிறிலங்கா யுத்த நிறுத்த கண்கணிப்பு குழு, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான பிரிவுகள் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
“சிறுவர், சிறுமிகளை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை இந்த உப மனித உரிமை ஆணைக்குழு போன்ற சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும் என இங்கு வேண்டிக்கொள்கிறேன்” என்றார் டியெற்றி மக்கோணால்.
நன்றி>புதினம்


