ஆகஸ்ட் 4th, 2006- ‍க்கானத் தொகுப்பு

மூதூர் எறிகணை வீச்சு: மகிந்தவுடன் மோதிய ஹக்கீம்.

ஆகஸ்ட் 4, 2006

மூதூரில் மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்துகின்றமை தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் அனைத்துக் கட்சி மாநாட்டில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா அரச தலைவர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டன.
கட்சிகளின் ஒவ்வொரு பிரதிநிதிகளும் மாநாட்டில் மூதூர் நிலைமை தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.
இங்கு கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம்,
அரசாங்கம் மூதூர் மக்கள் விடயத்தில் மனிதாபிமானத்துடன் செயற்படவில்லை. நிவாரணம் வழங்குவதற்காக விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி தலைமையகம் அனுமதியளித்துள்ளது. ஆனால் இராணுவம் தடுத்துள்ளது எனக் கூறினார்.
அதற்குப் பதிலளித்த மகிந்த,
இராணுவத்தினர் மக்கள் மீது எறிகணை வீச்சு தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. நிவராணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
விடுதலைப் புலிகள் அனுமதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சகல பகுதிகளுக்கும் அரசாங்கமே பொறுப்பு. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என ஒன்று இல்லை என்று குறிப்பிட்டார்.
மீண்டும் கருத்துக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம்,
இராணுவத்தினரே எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேரடியாகப் பாதிக்கப்படுகின்ற மக்கள் சொல்வதைத்தான் நான் கூறுகின்றேன் என்றார்.
மீண்டும் பதிலளித்த மகிந்த,
களத்தில் போராடுகின்ற இராணுவத்தினர் சொல்வதைத்தான் நானும் உங்களுக்கு சொல்கின்றேன் என்று கூறி இராணுவம் ஒருபோதும் மக்களைத் தாக்காது என எடுத்துக் கூறியுள்ளார்.
அத்துடன் மூதூர் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மனோ கணேசன் கருத்து
அதனையடுத்து கருத்து வெளியிட்ட மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்,
வடக்கு-கிழக்கு ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உங்களினால் எவ்வாறு நிர்வாகத்தை அங்கு நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பொருளாதரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதற்குப் பதிலளித்த மகிந்த,
இராணுவ அதிகாரிகள் மக்களுடன் அன்பாக பழகக் கூடியவர்கள். ஆகவே நிர்வாகம் செய்வதற்கு பிரச்சினை இருக்காது என்பதுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என ஒன்று இல்லை எனவும் கூறினார்.
பெ.இராதாகிருஸ்ணன்
மாவிலாறு நடவடிக்கை தொடர்பில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாநாட்டில் கலந்துகொண்ட ஜே.வி.பி. மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கு மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஸ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அத்தகைய தீர்மானம் கொண்டு வரக்கூடாது என சுட்டிக்காட்டினார்.
சரியான நிலைமை தெரியாது அவசரப்பட்டு இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. இதற்கு நாம் உடன்பட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், நுஆ ஆகிய கட்சிகள் அந்த வேண்டுகோளை ஆதரித்தன. ஆனாலும் அந்த வேண்டுகோள் பின்னர் நிராகரிக்கப்பட்டது.
இதேவேளை மாநாட்டில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் தனது கருத்தை கூறி மகிந்தவுடன் சர்ச்சைப்பட்ட பின்னர் மாநாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
அதேவேளை மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரிலிருந்து எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்துவதனாலேயே மூதூர் பகுதியில் பெருமளவு முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் காயமடைய வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகவும் முஸ்லிம்களை விடுதலைப் புலிகளே வெளியேற்றுவதாகவும் அங்கிருந்த பிரதிநிதிகளுக்கு விளக்கிக்கூறினார்.

ஆதாரம்: வீரகேசரி

தாக்குதல் தொடுக்கும் காலம் வந்துள்ளது: மகிந்த

ஆகஸ்ட் 4, 2006

பேச்சுக்களை நிறுத்தி, செயலில் இறங்கும் காலம் வந்துவிட்டது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடந்த வைபவத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கடந்த காலங்களில் நாம் நிறையப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது நாம் செயலில் இறங்கி, எமது இமாலய சக்திகளை வெளிக்காட்டுவதற்கும், நாட்டை கட்டியெழுப்புவதற்கும் காலம் வந்துள்ளது.
நாட்டில் மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும், நாட்டு மக்கள் நேரடியாக பங்களிப்பது அவர்களது கடமை. புதிதாக தங்கள் விசேட பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, கல்வி நிலைய நிர்வாகப் பணியாளர் பயிற்சிக்கான நிறைவுப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் பொதுச்சேவை ஊழியர்களுக்கு மகிந்த சான்றிதழ்களை வழங்கினார்.
நன்றி>புதினம்.

இலங்கை காவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் : கருணாநிதி!

ஆகஸ்ட் 4, 2006

கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சிறிலங்க காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்!

தமிழக சட்டப் பேரவையில் இன்று உயர்கல்வி மானியத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறிய கருணாநிதி இத்தகவலை வெளியிட்டார்.

கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் சிறிலங்க காவல் அதிகாரிகள் 44 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூறியதை மத்திய உள்துறை செயலருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் கடிதம் வாயிலாக தெரிவித்திருந்ததாகவும், அதற்கு மத்திய அரசின் உள்துறை செயலர் அனுப்பிய பதில் கடிதம் இன்று வந்ததாகவும், சிறிலங்க காவல் அதிகாரிகள் அனைவரும் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார்.

முதலமைச்சர் கருணாநிதி பேரவைக்கு இத்தகவலை தெரிவித்தவுடன், அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக, இப்பிரச்சனை குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் செல்வம், தமிழர்களின் உணர்விற்கு எதிராக சிறிலங்க காவலர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இப்பிரச்சனையில் மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூ விடுதலைச் சிறுத்தைகளும், மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேறினர்.

தமிழர்களின் உணர்வுகளை இப்பிரச்சனை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதனை மத்திய அரசு புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.

நன்றி>வெப்புலகம்.

மூதூரில் முக்கிய முகாமை விட்டு படையினர் தப்பினர்.

ஆகஸ்ட் 4, 2006

விடுதலைப் புலிகளின் தொடர் தாக்குதலால் மூதூரின் கிழக்குப் பிரதேசம் மற்றும் இதர விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீதான பீரங்கித் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக முகாமை கைவிட்டு படையினர் தப்பியோடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து நான்காவது நாட்களாக நடந்து வரும் மோதலில் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல் காரணமாகவே கட்டைப்பறிச்சான் முகாமை முற்றாகக் கைவிட்டுப் படையினர் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜீ.பி.எஸ் முகாம் என்று சிறப்பாக அழைக்கப்படும் இந்த முகாமிலிருந்தே செய்மதி வழிகாட்டலுடனான தூரம் கணிக்கும் கருவியின் உதவியுடன் எறிகணை வீச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன.
கடந்த மூன்று நாட்களில் இதர முகாம்கள் விடுதலைப் புலிகள் வசமானதையடுத்தும், மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்தும் நேற்றைய இரவுத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமலே இராணுவத்தினர் தப்பிச் சென்றுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மூதூரில் கடந்த சில நாட்களாக தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்த பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகள் சிறிலங்கா படையினருக்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்து நடத்திய வண்ணம் உள்ளனர்.
நன்றி>புதினம்.