ஜூலை 31st, 2006- ‍க்கானத் தொகுப்பு

புலிகளிடம் செஸ்னா ஸ்கை மாஸ்டர் ரக விமானங்கள்.-இந்தியா.

ஜூலை 31, 2006

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் செஸ்னா ஸ்கை மாஸ்டர் வகையைச் சேர்ந்த மேலும் இரண்டு இலகுரக விமானங்கள் இருப்பதாக இந்திய புலனாய்வுத்துறையின் ஊடாக சிறிலங்கா அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு நாளேடொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு விமானங்களும் இரண்டு தடவை வானில் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் ஒருதடவை வவுனியா விமானப்படை தளத்தில் உள்ள ரேடாரில் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்திரா எனும் ரேடார் கருவிகள் வடமத்திய மாகாணத்தில் பொருத்தப்பட்டிருப்பதனால் விடுதலைப் புலிகளின் விமானப்படை பிரிவு பற்றிய தகவல்களை கண்டறியக் கூடியதாக உள்ளதாகவும் அந்த நாளேட்டின் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

இணைப்பு : newstamilnet.com
Monday, 31 Jul 2006 USA

திருமலை மாவிலாற்றில், மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு.

ஜூலை 31, 2006

திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி – பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பகுதியை நோக்கி முன்னேற முயன்ற சிறீலங்கா படையணியொன்றை, வால்கொட்டுப் பகுதியில் எதிர்கொண்ட போராளிகள், உக்கிர பதிலடி தாக்குதல்களை தொடுத்து படையினரை விரட்டியடித்துள்ளனர்.

சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மட்டும் முன்னேறிய சிறீலங்கா படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது தலைதெறிக்க தப்பியோடியுள்ளனர்.

ஏக காலத்தில், மாவிலாற்றில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லாறு காட்டுப்புறம் ஊடாக, ஈச்சிலம்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகளை வழிமறித்து தாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள், படையினருக்கு பலத்த சேதாரங்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதேபோன்று, காட்டுப் பாதையூடாக சிறீலங்கா படைகள் மேற்கொண்ட மூன்றாவது படைநகர்வு முயற்சியும், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

தப்பியோடிய சிறீலங்கா படைகளை இலக்கு வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணி போராளிகளால், மூர்க்கத்தமான எறிகணை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

திருமலை மாவட்ட கட்டளை தளபதி கேணல் சொர்ணம் அவர்களின் நேரடி வழிநடத்தலில் களமிறங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள், சிறீலங்கா படைகளின் வலிந்த ஆக்கிரமிப்பு முயற்சியை வெற்றிகரமாக முறியடித்திருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்றைய முறியடிப்பு சமரில், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவைத் தழுவியதோடு மேலும் இருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

எதிரியுடன் களமாடி வீழ்ந்த இந்த மாவீரர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

திருமலை மாவிலாறு சமரில், சிறீலங்கா படையினர் தரப்பில் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய சமரில், 6 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டு, மேலும் 6 படையினர் படுகாயமடைந்திருப்பதாக, படைத்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

எனினும் உண்மை நிலையை மூடி மறைத்து, போலியான பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இணைப்பு 2

பிந்திக் கிடைத்த தகவலின் பலி சிறீலங்கா தரப்பில் இரு அதிகாரிகள் உட்பட 15 படையினர் பலியானதோடு மேலும் 50 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையில் சிறீலங்கா படையினர் இழப்புக்களை மூடிமறைப்பதில் ஈடுபட்டு வருகின்றது.

எனினும் பாரிய இழப்புக்கள் மத்தியில் படையினர் இன்று மாலையும் படை நடகர்வை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திருமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.

இதன் அறிகுறியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டப் பிரதேசங்கள் நோக்கி ஆட்லறி, பல்குழல் பீரங்கிகள், உலங்கு வானூர்த்தி தாக்குதல்களை படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் எழிலன் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி>புதினம்.

விமானத் தாக்குதல்கள், கண்காணிப்புப் பணி இடைநிறுத்தம்.

ஜூலை 31, 2006

சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தமது கண்காணிப்புப் பணியை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது.

விமானத் தாக்குதல்கள் மற்றும் ஏனைய படை நகர்வுகளுக்கும் தாக்குதல்களுக்கும் மத்தியில் கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளமையினாலேயே இவ்வாறானதொரு முடிவை கண்காணிப்புக் குழு எடுத்துள்ளது என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொஃப்பினூர் ஓமர்சன் கொழும்பு நாளேடு ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இருதரப்பிற்கும் இடையில் தாக்குதல்கள் நடைபெறும் போது அங்கு கண்காணிப்பாளர்கள் தமது பணியை முன்னெடுப்பது என்பது அவர்களுடைய உயிருக்கும் ஆபத்தானதாக அமையலாம்.

ஆகவே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பு கருதி போர் நடக்கும் இடங்களில் குழு தனது பணியை முன்னெடுக்காது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு தமது கண்காணிப்புப் பணிகள் அனைத்தையும் நிறுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான பின்லாந்து தனது கண்காணிப்பாளர்களை விடுதலைப் புலிகளின் நிபந்தனைக்கு அமைய பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பி அழைத்துக் கொள்வதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது.

அதேபோன்று இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாடான டென்மார்க் கடந்த வெள்ளிக்கிழமை, தனது கண்காணிப்பாளர்களையும் திருப்பி அழைக்கும் முடிவை குழுவின் தலைமைப்பீடத்திற்கு அறிவித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் விதித்துள்ள காலக்கெடுவான செப்ரெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த இரு நாட்டு கண்காணிப்பாளர்களும் திருப்பி அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடான சுவீடன் இன்னமும் எந்த முடிவும் தனது வெளியேற்றம் குறித்து அறிவிக்கவில்லை. குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவராதலால் சுவீடன் அரசு தனது முடிவை வெளியிட சற்று காலதாமதமாகலாம் எனத் தெரியவருகிறது.

நன்றி-புதினம்