ஜூலை 19th, 2006- ‍க்கானத் தொகுப்பு

கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை அனுமதிக்கக் கூடாது: வைகோ.

ஜூலை 19, 2006

தமிழ்நாட்டில் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மறுமலர்ச்சி பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

மன்மோகன் சிங்கை இன்று புதன்கிழமை காலை புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பிரதமரிடம் வைகோ விரிவாக எடுத்துச் சொன்னார்.
மன்மோகனிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில், சிறிலங்கை விமானப்படைக்கு இந்தியா ரேடார்களை வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அப்பாவித் தமிழர்கள் மீது தொடர்ந்து இராணுவத் தாக்குதல் நடத்திவரும் சிறிலங்காவுக்கு இந்தியா எந்தவித இராணுவ உதவியையும் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு இராணுவ உதவியையோ இராணுவ தளவாட விற்பனையையோ செய்வதில்லை என்று 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இந்திய அரசு உறுதியாகவும் உண்மையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

நளினி – முருகன் தம்பதியினரின் மகள் அரித்ரா தமிழகத்திற்கு வந்து கல்வி பயில விசா வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் நேரில் பேசிய போது வைகோ கேட்டுக் கொண்டார்.
சிறிலங்காவின் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா சென்னை சூளைமேடு கொலை வழக்கில் தேடப்படுகிற நபர். அவர் இந்தியாவுக்கு வந்து இந்தியப் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து அறிக்கைகள் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என்று மன்மோகனிடம் சுட்டிக்காட்டிய வைகோ, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

கொலையாளி டக்ள்ஸ் தேவானாந்தா குறித்து சென்னையிலிருந்து பழ. நெடுமாறன் வெளியிட்டு வரும் தென் செய்தி இதழில் இடம்பெற்றுள்ள செய்தி விவரம்:

தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவரை படுகொலை செய்த குற்றவாளியும், ஆட்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுக்கு ஆளானவரும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவருமான சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்து 15-04-06 நாளிட்ட தென்செய்தியில் விரிவானச் செய்தி வெளி யிட்டிருந்தது.
இவர் மீதுள்ள வழக்குகள் இன்னமும் தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
தேடப்படும் குற்றவாளியாக இவர் சென்னை நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அடிக்கடி இவர் தமிழ்நாட்டுக்கு வந்து செய்தியாளர் கூட்டங்களில் பேசுவதும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இவரைப் பொறுத்தவரையில் சட்டம் செத்துவிட்டதா? ஏன் இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை? தமிழகக் காவல்துறை தூங்குகிறதா? என்பது போன்ற கேள்விகளைக் எழுப்பியிருந்தோம்.
.
13-07-06 அன்று தினமணியில் டக்ளஸ் தேவானந்தாவின் சிறப்புப் பேட்டி வெளியிடப்பட்டுள்ளது.
புதுடில்லியில் வெளியுறவுத் துறைச் செயலாளர் சியாம் சரண் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்ட பல அதிகாரிகளையும் தலைவர்களையும் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துப் பேசினார்.
தினமணிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,
“இலங்கையின் தற்போதைய சூழ்நிலை அங்குள்ள தமிழர்களின் நிலைக் குறித்து இந்திய அதிகாரிகள் மற்றும் தலைவர்களிடம் எடுத்துரைத்தேன்.
இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடைமுறைச் சாத்தியமான மூன்று அம்சத் திட்டங்களை இந்திய அரசிடம் அளித்துள்ளேன்.
சிறிலங்கா அரசின் சார்பில் நான் அளித்தத் திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.’
மேலே கண்டச் செய்தி ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
தேடப்படும் குற்றவாளியாக சென்னை செசன்சு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா 1986 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 20 ஆண்டுகாலமாக கைது செய்யப்படவில்லை.

அவரைத் தேடும் முயற்சியிலும் தமிழகக் காவல்துறை ஈடுபடவில்லை. அப்படியானால் இந்த நாட்டுச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராக அவர் விளங்குகிறார் என்பது அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டுக் காவல்துறை அவரை கைது செய்ய முடியாதபடி டில்லி தடுக்கிறது என்பதும் தெரிகிறது.

தேடப்படும் கொலைக் குற்றவாளி ஒருவர் பகிரங்கமாக டில்லிக்கு வந்து பிரதமரின் ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் உட்பட உயரதிகாரிகளை சந்திக்கக்கூடிய நிலைமையில் இருக்கிறார் என்று சொன்னால் இதைவிடக் கேலிக் கூத்து எதுவும் இல்லை.
தமிழ்நாட்டுத் தமிழன் படுகொலையானாலும் கவலையில்லை. டக்ளஸ் தேவானந்தாவைப் பாதுகாக்க வேண்டும் என்று டில்லி நினைக்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படை சுட்டுத் தள்ளியபோதும் பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், குறைந்தபட்சம் சிறிலங்கா கடற்படைக்கு எச்சரிக்கை கூடவிடுக்காமல் டில்லி மௌனம் சாதிக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் டில்லியின் உண்மை உருவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று தென்செய்தி இதழின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்.

இந்தியாவில் சில இணையத்தளங்களுக்கு தடை.

ஜூலை 19, 2006

இந்தியாவில் 50 மில்லியன் பேர் இணையங்களைப் பயன்படுத்துகின்றனர்
இந்தியாவின் மும்பாய் நகரத்தில் கடந்த வாரத்தில் நடத்தபட்ட குண்டு தாக்குதலை அடுத்து, பல்வேறு வெப்சைட் எனப்படும் இணையங்களுக்கு மக்கள் சென்று பார்ப்பதினை தடுக்க, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதினை இந்தியாவில் இருக்கின்ற இணையத்தளப் பயன்பாட்டாளர்கள் குறை கூறியுள்ளனர்.

மும்பாய் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக, பல்வேறு இணைய பயன்பாட்டாளர்கள், தங்களுடைய கருத்துகளை வெளியிடும் ‘வெப்லாக்ஸ்’ அல்லது ‘ப்லாக்ஸ்’ என்று கூறப்படும் இணையங்களை எதற்காக தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்பதினை அரசாங்கம் கூறவில்லை.

ஆனால் வெறுப்பு உணர்வினை ஏற்படுத்தும் செய்திகள் பரவுவதினை தடுக்கவே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக, அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் தற்போது தடுக்கப்பட்டுள்ள இணையங்களில், இந்து தேசியத்துவம் மற்றும் கம்யூனிஸத்திற்கு ஆதரவான இணையங்களும் அடங்கும்.

அரசாங்கத்தின் இந்த முடிவானது, பேச்சு சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என இத்தகைய இணையங்களை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.

நன்றி பி பி சி தமிழ்ச்சேவை

http://www.eelabarathi.com

உண்மையை உலகுக்கு வெளியிடுவதே ஊடக தர்மம்!

ஜூலை 19, 2006

உண்மையை உலகுக்கு வெளியிடுவதே ஊடக தர்மம்! – தமிழன்பன் (சென்னை)

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டு ஊடகங்கள் குறித்தும் தென்னிலங்கை ஊடகங்கள் குறித்தும் ஈழத்தமிழர் நடத்துகின்ற ஊடகங்கள் பலவற்றில் பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் என்னுடைய கருத்தையும் பதிவு செய்கின்றேன்.

பெரும்பாலான தென்னிலங்கை ஊடகங்கள் சிங்கள இனவாதிகளால் நடத்தப்படுபவைகள். இலங்கையில் ஊடகத்துறையினர் பலர் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள் என்பதால் சிங்கள இனவாத சக்திகளால் முதலில் கொலை பயமுறுத்தலுக்கு உள்ளாகி, அதையும் மீறிச் செயற்பட்டதால் படுகொலை செய்யப்பட்டதும், பல ஊடக அலுவலகங்கள் மிக மோசமாக தாக்கி சேதப்படுத்தப்பட்டதும் செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்ததே. சிங்கள அரசும் அதன் புலனாய்வுப்பிரிவினரும் தேவையேற்பட்டால் தமது கொள்கைகளை எதிர்க்கும் தம்மினத்தவரையே கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள் என்பதை அண்மையில் உண்மை செய்திகளை துணிச்சலுடன் எழுதிய சிங்கள செய்தியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதன் மூலம் நிரூபித்துள்ளது. இந்நிலையில் இலங்கை சிங்கள அரசின் நெருக்குதலுக்கும் கொலை பயமுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கும் சில தென்னிலங்கை நடு நிலை ஊடகத்துறையினரும் ஊடகங்களும் உண்மையை வெளியிட அஞ்சுகின்றன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் உண்மைகளை வெளியிட முடியாமல் இருப்பது என்பது ஒரு துர்ப்;பாக்கியமான நிலைதான்.

ஆனால் நம் தமிழ் நாட்டில் தமிழர்களிடமே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெரிய சிறிய பத்திரிகைகள் எல்லாம் நடுநிலையுடன் ஈழச் செய்திகளை வெளியிடுவதில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதும், வெட்கப்பட வேண்டியதுமான விடயமாகும். உள்நாட்டுச் செய்திகளைத்தான் பற்பல காரணங்களுக்காக ஒரு பக்கச்சார்பாக வெளியிடுகின்றன என்றால் ஈழத்து செய்திகளையும் கூட ஒரு பக்கச்சார்பாக சிங்கள அரசுக்கு சாதகமாக வெளியிடுவதும், உண்மைக்கு புறம்பாக திரித்து வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எங்கோ தொலை தூரத்தில் லெபனான் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பிஞ்சுக்குழந்தை ஒன்று தாக்கப்பட்டுள்ளதை படத்துடன் நேற்று (17.07.06) வெளியிட்டு என்ன செய்தது இந்தக்குழந்தை? ஏன் இந்த ரத்த வெறி? என்று கேள்வி எழுப்பியுள்ள தினமலர் நாளேட்டுக்கும் மற்றைய நாளேடுகளுக்கும் சில மைல்களுக்கு அப்பாலுள்ள தமிழீழத்தில் நடப்பது நெஞ்சை உறுத்தவில்லையா? சிங்கள இன வெறி அரசின் முப்படைகளாலும் அதன் துணை படைகளான தமிழின துரோகக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட பல பச்சிளங் குழந்தைகளும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் பெண்களையும் பல அப்பாவிக் குடும்பங்களையும் அண்மையில் நடந்த வங்காலை படு கொலைகளும் பேசாலை தேவாலய படு கொலைகளும் தமிழ் மீனவர்கள் மீதான கொடூர படு கொலைகளும் ஏன் தெரியாமல் போய்விட்டன? ஈழத்தமிழர்களும் அவர்கள் குழந்தைகளும் பெண்களும் மனிதர்களாக இங்குள்ள தமிழ் ஊடகங்களுக்கு தெரியவில்லையா? அவர்கள் என்ன தமிழ் நாட்டின் விரோதிகளா? அல்லது இங்கும் ஊடகங்களுக்கும் நிருபர்களுக்கும் இலங்கை அரசால் கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளனவா? அல்லது மத்திய மாநில அரசுகள் ஈழச்செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டாம் என்று தணிக்கை செய்துள்ளனவா? பின்பு ஏன் இந்த ஒரு பக்கச்சார்பான நிலை? இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் எம்முடன் ஒன்றுபட்ட ஈழத்தமிழர்களின் அவலத்தை அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை இனியும் மூடிமறைக்காமல் உள்ளது உள்ளபடி உண்மை செய்திகளை தமிழக பத்திரிகைகள் எல்லாம் அவ்வப்போது வெளியிடவேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோளாகும்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்பவர்களின் பத்திரிகைகள் கூட ஈழத்தமிழர்களுக்கு சிங்கள இனவெறி அரசினால் இழைக்கப்படும் அநீதிகளை செய்யப்படும் படு கொலைகளை வெளியிடவேண்டும் என்பதில் அக்கறையோ அல்லது ஆர்வமோ இருப்பதாக தெரியவில்லை. மேலும் ஈழத்தமிழர்களின் இன்னலை போக்க தற்போது ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் தமிழகத்தில் பேரணிகள், பட்டினிப்போராட்டங்கள், கண்டன கூட்டங்கள் என்று நாள் தோறும் நடத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு விடுகின்றன என்பது தமிழர்களாகிய நாம் மிகவும் வெட்கி வேதனைப்பட வேண்டிய விடயங்களாகும். நானே பல செய்திகளை சேகரித்து, அவை எந்தெந்த இணயத்தில் வெளியானது என்னும் குறிப்புகளுடன் தமிழக முன்னணி தமிழ் நாளேடுகளுக்கு அவ்வப்போது அனுப்பியிருந்தேன். ஆனால் எந்த நாளேடும் அதனை கண்டு கொள்ளவே இல்லை. மாறாக ஒரு இராணுவ அதிகாரி கொல்லப்பட்டாலோ அல்லது சில இராணுவ அதிகாரிகள் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டோ அல்லது படு காயமுற்றாலோ அதனை முக்கிய செய்தியாக இங்குள்ள நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் உடனுக்குடன் பரபரப்பாக வெளியிடுகின்றன. சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழின படுகொலைகளை செய்யும் அரச முப்படையினர் தமிழர் படைகளினால் அல்லது விடுதலை புலிகளால் தாக்கி அழிக்கப்படுவது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியதோ அல்லது ஆதங்கப்படக் கூடிய செய்தியோ அல்ல.

ஆனால் ஈழத்தில் அப்பாவி தமிழ் பிஞ்சுக் குழந்தைகளும், இளம் பெண்களும், பல்கலைக்கழக மாணவர்களும், தமிழ் பற்றாளர்களும், பாராளுமன்ற உறுப்பினரும், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர துணை புரிந்த ஊடகவியலாளர்களும் இனவெறி பிடித்த சிங்கள அரசின் முப்படை களாலும் அவற்றிற்கு துணை புரியும் தமிழின துரோக குழுக்களினாலும் மிருகத்தனமாக தாக்கி கொன்று அழிக்கப்பட்டால் அவை இந்திய ஊடகவியலாளர்களால் குறிப்பாக தமிழ் நாட்டின் பத்திரிகைகளாலும் தொலை காட்சிகளாலும் ஏன் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன? இச்செய்திகளை வெளியிடுவதால் இந்திய தமிழ் நாட்டு ஊடகங்கள் ஒன்றும் விடுதலை புலிகளுக்கு துணை போவதாக அர்த்;தமாகிவிடாது. விடுதலை (திராவிடர் கழகம்) மற்றும் தமிழ் ஓசை (பாட்டாளி மக்கள் கட்சி) போன்ற நாளேடுகள் கூட குறைவாகவே ஈழச் செய்திகளையும் அவை சார்ந்த தலையங்கம் மற்றும் கட்டுரைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. ஆயினும் மற்றைய இதழ்களோடு ஒப்பிடுகின்ற பொழுது இவைகள் செய்வது அதிகமே.

ஊடகத்துறை என்பது செய்திகளை உள்ளதை உள்ளபடி கூட்டாமல் குறைக்காமல் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உண்மைகளை எடுத்துக் கூறுவதற்கு எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் செயற்படவேண்டும். அதுதான் நேர்மையான ஊடகத்துறைக்கு இருக்கவேண்டிய முதல் குறிக்கோளும் கடமையுமாகும். அதன்பின்பு தான் மற்றையவை அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இதனை எல்லா ஊடகங்களும் ஒரு தர்மமாக கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் ஊடகங்களுக்கு பெருமையும் கௌரவமும் ஆகும். இதை இனியாவது தமிழ் நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்யும் என்று நம்புவோம்.

ஈழத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டு பற்பல அகிம்சை போராட்டங்களின் மூலமாக போராடி பலவாறு ஏமாற்றப்பட்டு முடிவில் ஆயுதப்போராட்டம் ஒன்றுதான் ஒரே வழி என்று சிலரால் ஆரம்பிக்கப்பட்டது தான் ஈழத்தமிழர்களின் ஆயத போராட்டம். அது இன்று ஈழத்தமிழர்களின் ஆதரவை பெற்ற மிகப் பெரிய தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவமாக வடிவெடுத்துள்ளது என்பதே உண்மை. ஈழத்தமிழ் மக்களின் மிக குறைந்த வேண்டுகோள்கள் கூட புறக்கணிக்கப்பட்டன. அன்றைய சிங்கள அரசு தமிழர்களின் பிரதிநிதியான தந்தை செல்வாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பின்னர் சிங்கள இனவாதிகளின் எதிர்பினால் திரு. பண்டாரநாயக்கா கிழித்து வீசினார். இதைத்தான் மீண்டும் இன்றைய சிங்கள அரசும் செய்யப்போகிறது என்பதே உண்மை. இதை சர்வதேசம் வேண்டுமானால் நம்பி ஏமாந்து போகலாம். ஆனால் நிச்சயமாக ஈழத்தமிழர்களும் தமிழீழ விடுதலை புலிகளும் சிறு துளியும் நம்பமாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். சிங்கள அரசோ அல்லது எதிர் கட்சியினரோ எவருமே ஈழத்தில் நிரந்தர அமைதி ஏற்படுவதை எப்போதும் விரும்பியதுமில்லை அப்படியே விரும்பினாலும் அதை அவர்கள் நிறைவேற்றுவதற்கு பெரும்பாண்மை சிங்களவர்கள் ஒரு போதும் அனுமதிக்கப்போவதுமில்லை. இது காலம் காலமாக பல சிங்கள அரசுகளின் ஆட்சியின் போது சரித்திரம் கண்ட உண்மை. அண்மையில் நடந்து முடிந்த ஜெனீவா பேச்சு வார்த்தை இதற்கு ஒரு உதாரணம். ஒப்புக்கொண்டபடி இலங்கை சிங்கள அரசு நடந்து கொண்டதா? துணை இராணுவத்தின் ஆயதங்களை கைப்பற்றி அவர்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றியதா? தமது வாழ்விடங்களை விட்டு இராணுவ ஆக்கிரமிப்பினால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப முடிந்ததா? வழிபாட்டுத்தலங்கள் கல்விக் கூடங்களில் நிலை கொண்டுள்ள முப்படைகளும் வெளியேறினார்களா? இவற்றையெல்லாம் செய்வதாக ஒப்புக்கொண்டு இலங்கை சிங்கள அரசு சர்வதேசத்தின் முன்னால் கைச்சாத்திட்ட ஜெனீவா ஒப்பந்தத்துக்கு என்ன ஆயிற்று? இது ஒன்று போதாதா சிங்கள இன வெறி அரசின் உண்மையான முகத்தை புரிந்து கொள்வதற்கு? இன்னமும் அதன் பொய்யான நாடகத்தை நம்புவதற்கு ஈழத்தமிழர்கள் எவரும் தயாராக இல்லை.

தமிழ் நாட்டிலுள்ள இன மானத் தமிழர்களும் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்கவேண்டிய காலம் வந்து விட்டது. தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், தமிழீழத்தில் வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள். ஈழத்தில் தமிழினம் அநியாயமாக கொன்று அழிக்கப்படுவதை இனியும் வெறுமனே பார்த்து வாளாவிருக்காமல் தமிழினம் என்ற ஒரே உணர்வுடன் அரசியல், சாதி மத வேறுபாடுகளை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு தமிழன் என்னும் இன உணர்வோடு ஒன்றுபடுவோம். ஈழத்தில் நம் இனத்தை சிங்கள இனவெறி அரசின் கொலைவெறி தாக்குதலில் இருந்து காத்திட மாநில அரசு விரைந்து செயல்பட்டு நடுவணரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென ஒருமித்து குரல் கொடுப்போம். நம் ஈழத்தமிழ் சொந்தங்களை காத்திடுவோம். ||ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வு|| என்பதை நினைவில் கொண்டு விரைந்து செயல்படுவோமாக.

நன்றி>வெப்பீளம்