ஜூலை 6th, 2006- ‍க்கானத் தொகுப்பு

புலம்பெயர் படைப்பாளிகளுக்கு தாயகத்தில் இருந்து அழைப்பு.

ஜூலை 6, 2006

தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்:
உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்ட இனங்கள் எல்லாமே இறுதியில் வெற்றி பெற்றிருப்பது எமக்கு ஆறுதலானது. எமக்கும் அந்த நிலைமையே ஏற்படும். நாங்கள் போர்ச் சூழலுக்குள் திரும்பவும் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம். அதை எதிர்கொள்வதற்கு எங்களுடைய படைப்பாளிகள் பங்களிப்பைக் கேட்டு நிகழ்வு ஒன்றைச் செய்திருந்தோம்.
1990 முதல் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எங்களுடைய படைப்பாளிகள்தான் தர்மம்சார் எமது போராட்டத்தின் பக்கத்துணையாக இருந்து மக்களை இணைத்தவர்கள். உலகுக்குச் சொன்னவர்கள். இந்த அமைதிக்காலத்தில் நாங்கள் ஏன் கரைய வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்ப எமது பயணத்தை மீளத் தொடங்கியுள்ளோம். மொத்தம் 150 பேர் பங்கேற்றனர்.

எமது போராட்டம் வேறு ஒரு வடிவம் எடுத்தது. இராஜதந்திர நகர்வுகள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் ஈழத் தமிழனுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லையாம். அழுகைதான் பரிசாம். அடங்கிப் போவதுதான் விதி என்று சிறிலங்காத் தரப்பு எச்சரிக்கை வைத்திருக்கிறது. நாங்கள் அடங்கிப் போக முடியாது. இதுவரை போராட்டத்துக்கான பணிகளைச் செய்த எமது படைப்பாளிகள் இப்போது போருக்கான பணிகளைச் செய்கிறோம்.

புலத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் இரட்டைச் சுமை. 1995 ஆம் ஆண்டு காலம் முதல் 2000 ஆம் ஆண்டு காலம் வரை வன்னியிலே நாங்கள் வெற்றிகளைச் சந்தித்த போதும் அது சிறையாக இருந்தோம். எமது அழுகையின் குரல் பெரிதாக வெளிவரவில்லை. எமது கண்ணீர் பெரிதாக வெளியில் தெரியவில்லை.

இன்று உலகம் முழுமைக்கும் நாம் அறிந்தவரையில் 40 ஊடகங்கள் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகள் உள்ளனர்.
நாளை திரும்பவும் வன்னி என்ற வட்டத்துக்குள் அடக்கி- அடக்க முடியாது- ஒடுக்கி- ஒடுக்க முடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் போது நாங்கள் எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க முடியாது. அந்தச் சுமையை உலகம் முழுமைக்கும் பரவிய உறவுகள் கூற வேண்டும். எமது அழுகையையும் கண்ணீரையும் நீங்கள் கூற வேண்டும். எங்களுடைய அழுகையை தாயகத்தின் மொழியில் உங்களால் சொல்ல முடியாது. அது பொய்யாக இருக்கும். புலம்பெயர் தமிழராக இருப்பவர் ஆர்ட்டிலறி அடிப்பது பற்றியோ செல் அடிப்பது பற்றியோ எழுத முடியாது.

எங்களுடைய குரலை உங்களுடைய குரலினூடாக உலகத்துக்குச் சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்பிச் சொல்லாதீர்கள். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையே எங்களுக்குத் திருப்பிச் சொல்வதில் அர்த்தமில்லை. உலகுக்கு உங்கள் மொழியில் சொல்லுங்கள். வேற்று மொழிகளில் சொல்லுங்கள். அதை நாங்கள் செய்வது மிகக்குறைவு. பிரெஞ்ச், டொச் மொழியில் எழுதக் கூடிய தமிழர்கள் இன்று வந்துவிட்டார்கள். தமிழில் எழுதியாவது அதை வேற்று மொழிக்குக் கொண்டு செல்லுங்கள்.

ஈழத் தமிழினம் படுகிற துயரமும் கண்ணீரும் வதையும் வலியும் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது உலகுக்குத் தெரிந்திருந்தால் நமக்கு இடைஞ்சல் இல்லையே… ஆண்டுக்கு இருமுறை கூட்டம் கூடுவது அல்ல புலம்பெயர் தமிழரின் பணி. அதற்கு மேலாக தினசரி அதற்காக இயங்க வேண்டும். படைப்பாளிகள் இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும். தாயகத்து உறவுகளின் வலியை படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் மூலம் உலகத்துக்குச் சொல்ல வேண்டும்.

பாலஸ்தீன மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. வியட்நாமிய மக்களின் கண்ணீரும் துயரமும் அப்படித்தான் வந்தது. அதுபோல ஈழத் தமிழரின் கண்ணீரையும் துயரையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும். அரசியல் ரீதியாக எப்படி ஒரு இராஜதந்திர நகர்வு மேற்கொள்ளப்படுகிறதோ அப்படி படைப்பு ரீதியாகவும் ஒரு நடவடிக்கை இயங்க வேண்டும். புலம்பெயர் தேசத்தில் கலைஞர்களும் படைப்பாளிகளும் அதிகம். ஒரு தாயின் கடமையைப் போல் செய்ய வேண்டும். இதை செவ்வனே செய்வதே புலம்பெயர் படைப்பாளிகள் ஆக வேண்டும்.

நாங்கள் போராடுவோம் என்பது உண்மை. இறுதி ஆள் இருக்கும் வரை போரிடுவோம். எந்தக் கொம்பன் வந்தாலும் நாம் போரிடுவோம். அது வேறு பிரச்சனை. ஆனால் அதை நமது நியாயப்பாடுகளை உலகத்துக்குச் சொல்வது யார்? புலம்பெயர் தமிழர்களுக்குள் இருக்கிற படைப்பாளிகளும் கலைஞர்களும்தான். அவர்கள் அதைச் செய்ய வேண்டும். சும்மா வெறுமனே அடித்தான்- கொத்தினான் என்று இல்லாமல் படைப்பாளியின் நெஞ்சுக்குள் ஆழப் பதிந்து இறங்குவதுபோல் சொல்ல வேண்டும். படைப்பின் மூலமே போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன. மார்க்ஸிம் கார்க்கிய, மாயவோஸ்கி, பாப்லோ நெரூடா என்றாலும் பாரதி என்றாலும் அவர்கள் போராட்டத்துக்கு பணி செய்தனர்.

ஆகவே எமது புலம்பெயர் உறவுகளே!
அவர்களுக்குள் பூத்துக் கிடக்கும் படைப்பாளிகளே!
இந்தப் பணிகளை அவர்கள் தங்கள் கைகளில் எடுக்கட்டும்!
ஏனெனில் நாம் திரும்பவும் போரிடுவோம். திரும்பவும் அடைபடுவோம். எங்கள் அவலம் உங்களின் கண்களால் தெரியவேண்டும்.
உங்களுக்கு இரட்டை வேலை. நீங்களே வதை பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாயகமும் வதைபட்டுக் கொண்டிருக்கிறது. உங்களது துன்பத்தை எமக்குத் தெரியப்படுத்துங்கள். எமது துன்பத்தை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள்.
என் பிரியத்துக்குரிய எமது புலம் பெயர் தமிழ் உறவுகளுக்குள்ளே பூத்துக் கிடக்கிற இளம் படைப்பாளிகளே!

உங்களுக்கு இரட்டை வேலை இருக்கிறது. எங்களுக்கு ஒற்றைச் சுமை.. இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உங்களது பங்களிப்பு பெரிது என்பதை புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

இது கவிஞர் புதுவை இரத்தினதுரையின் குரல் அல்ல. உங்களுடைய தாயகத்தின் குரல்.
புலம்பெயர் வாழ் தமிழர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளாதிருந்தால் அவர்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. நாம் அவர்களைப் பிழையாகக் கருதவில்லை. புலம்பெயர் தமிழர்களுக்கு விடுதலையின் தாற்பரியத்தையும் எமது அழுகையையும் கண்ணீரையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமெனில் அவர்களுக்கும் சொல்லிக் காட்ட வேண்டும்.

எங்களுடைய புலம்பெயர் தமிழர்களில் கொஞ்சம் பேர் இன்னும் உறக்கத்தில்தான் இருப்பார்களாக இருந்தால் புலம்பெயர் படைப்பாளிகளுக்குப் பெரிய பணி இருக்கிறது. இதனுடன் சேர்த்து அவர்களுக்கு மூன்று பணியாகிறது. புலம்பெயர் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் ஊடகத்தாருக்கும் நித்திரையில்லா பணி தங்களது காலடியிலே விழுந்து கிடக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்த விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று கூறுகிற படைப்பாளிகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் என்பது வெறும் சொல் அல்ல. விடுதலைப் போராட்டத்தின் சொல்தான் விடுதலைப் புலிகள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கட்டும். நானில்லாமல் விடுதலைப் போராட்டமா? வெற்றி பெறுமா? என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்- பழைய போராளிகள் என்ற போர்வையில். அவர்கள் இருக்கட்டும்.

நடுநிலைமைக்காரர்கள்தான் இப்போது பிரச்சனை. அது என்ன நடுநிலைமை?
நீதிக்கும் அநீதிக்கும் இடையே “நடு” என்ற ஒரு வார்த்தை உண்டா?
சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் இடையே “நடு” என்ற ஒருவார்த்தை உண்டோ? அளவான சுத்தம்- அளவான அசுத்தம் என்று உள்ளதோ? அது போக்கிரித்தனம்.
இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறவர்கள் நேர்மையானவர்கள். நடுநிலைமை என்பதற்கு தமிழிலே வார்த்தைகளே இல்லை.

தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள். காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான்.

அப்படியான படைப்பாளிகள் எங்கும் இருப்பார்கள். நடுநிலைமை என்பது தப்பித்துக் கொள்ளுதல். நடுநிலைமையை மீறி பட்டுப்படாமல் செல்லும் போக்கும் உண்டு. பின்பக்கம் பார்த்தால் கிளிபோலும் முன்பக்கம் பார்த்தால் காகம் போலும் இருக்கும். அப்படியான படைப்பாளிகளும் இருக்கிறார்கள்.

குளத்தோடு கோபித்துக் கொண்டு என்னமோ செய்யக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு.
இந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றியான விமர்சனங்கள் உண்டு. இந்த விடுதலைப் போராட்டம் சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது. ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் தாயகத்திலே உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கவில்லை. பூப்பறிக்கவில்லை. உயிரோடு விளையாடுகின்ற- சாவோடு விளையாடுகின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். சரியும் பிழையும் இருக்கலாம். விகிதாசாரத்தில் எது அதிகம் என்று பார்க்க வேண்டும்.

எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை- எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் “விடுதலைப் புலிகள்” என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது. கதைத்துக் கொண்டே இருந்திருப்போம்.
இந்த விடுதலை என்பது வேண்டுமா இல்லையா? நாய்க்கும் மரத்துக்கும் இருக்கிற விடுதலை ஈழத் தமிழனுக்கும் வேண்டும் அல்லவா?
அந்த விடுதலைப் போராட்டம் இப்போது நடக்கிறது அல்லவா? அதன் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் இல்லையா? அந்தப் புள்ளியிலிருந்துதான் இந்தப் படைப்பாளிகள் தொடங்க வேண்டும்.

அதைவிடுத்து அவர்கள் அப்படியாம்- இவர்கள் இப்படியாம் என்ற மனோபாவம் இருக்க இயலாது.
முழுமையான விடுதலைக்கான எல்லைகளைத் தொட்டு நிற்கும் தூரத்தில் நிற்கிறோம் நாம்.

உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
விடுதலைப் போராட்டத்தின் பக்கத்தில் எரிகின்ற நெருப்புக்குப் பக்கத்தில் தயவு செய்து தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். தீக்குளித்துக் கொண்டிருக்கிற தேசத்திலிருந்து நாம் இதைக் கேட்கிறோம்.

எமது விடுதலை நாம் நிச்சயம் பெறுவோம். ஆயிரம் தடைகள் வரட்டும். உலகில் ஆயிரம் தடைகள் வந்தபின்னர்தான் மக்கள் வென்றிருக்கிறார்கள். நாடுகள் வென்றிருக்கின்றன. இப்போது எங்களுக்கும் வந்திருக்கிறது. நாங்கள் வெல்லுவோம். தமிழ் மக்களின் சக்தியோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம்.

மாலை 5 மணிக்கு வந்து பாருங்கள். ஊரெங்கும் அணிவகுப்புகள். நீங்கள் வந்து பார்த்தீர்கள் எனில் மெய்சிலிர்த்துப் போவீர்கள். ஆகையால் இந்த எரிகின்ற நெருப்புக்கு நீர் ஊற்றிவிடாதீர்.

எவனொருவனுக்கு விடுதலை உணர்வு வந்து நெஞ்சுக்குள் சிறகு முளைத்து பறக்காமல் இருக்கிறானோ அவன் படைப்பாளியே இல்லை ஐயா! அவன் கலைஞனே அல்ல- அவனுக்கு முதுகுகளில் இறக்கை முளைக்கும் போதுதான் படைப்புத் தளத்தை செய்ய வெளிக்கிடுகிறான்.

எனவே முதுகில் இறக்கை முளைத்த எனது உறவுப் படைப்பாளிகளே!
சிறகுகளை அகல விரியுங்கள்!
விடுதலையின் வானத்தை நோக்கியதாக அது இருக்கட்டும்!
எல்லோரும் சேர்ந்து வாருங்கள் வடம் பிடிப்போம்! இழுத்து வந்து சரியான இடத்தில் நிறுத்துவோம்!

உங்களிடமிருந்து நம் தேசம் வேண்டுகிறது- உங்கள் படைப்புளம் இன்னும் இன்னும் விரிய வேண்டும் என்று தாயகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார் புதுவை இரத்தினதுரை.

நன்றி>புதினம்.

ஒட்டுக்குழுக்களை கட்டுப்படுத்த இந்தியா அழுத்தம்.

ஜூலை 6, 2006

கருணா குழு உட்பட ஒட்டுப் படைகள் இயங்குகின்றன என்றும், அவற்றின் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கின்றன என்றும் தமிழர் தரப்பில் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. எனவே, அவை போன்ற ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை அடக்குவதன் மூலம் அரசியல் இணக்கப்பாட்டுக்கான புறச்சூழலை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு இலங்கையை இந்தியா கோரியிருக்கின்றது என யாழ் உதயன் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

அதில் மேலும்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் ஒன்றரை நாள் விஜயமாக கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கொழும்புக்கு வந்து தங்கியிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண், இத் தகைய செய்தியை இந்தியத் தரப்பிடமிருந்து எடுத்து வந்து இலங்கை அரசுக்குத் தெரிவித் தார் எனக் கூறப்படுகின்றது.

கடந்த திங்களன்று காலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை ஷியாம் சரண் சந்தித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த செய்தியை அப்போது ஷியாம் சரண் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிடம் தெரி வித்தார்.

அந்தச் செய்தியிலேயே கருணா குழு உட்பட ஏனைய ஒட்டுக்குழுக்கள் மற்றும் துணைப்படைகள் போன்றவற்றின் நடவடிக்கைகளை அடக்கி, அமைதித் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தக்கோரும் வலி யுறுத்தல் அடங்கியிருந்ததாகத் தெரியவந்தது.

“”ஏற்கனவே, ஒரு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் போதும். இன்னொரு புலிகள் அமைப்பை விருத்தி செய்வதற்கு வழி செய்து உபத்திரவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்” என்ற சாரப்பட அன்புரிமையுடன் கூடிய ஆலோசனை இந்தியத் தரப்பினால் இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்டதாம்.

“”புலிகளை மரபு ரீதியான யுத்தத்தில் தோற்கடித்து விடலாம் என்ற தயாரிப்பில் இலங்கை அரசுத் தலைமை முனைப்பாக இருக்கலாம். ஆனால், மீண்டும் போர் வெடித்தால் மரபு ரீதியான யுத்தத்துக்கு அப்பாற்பட்ட வழிகளையும் புலிகள் நாடலாம். அதற்கும் சாத்தியங்கள் உள்ளன. அதன் மூலம் இலங்கை அரசைப் புலிகள் கணிசமான அளவில் முடக்கவும் வாய்ப்புண்டு” என்ற எச்சரிக்கையும் இந்தியத் தரப்பால் தெரிவிக்கப்பட்டதாம்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் தற்போது தமி ழகத்திலும், புதுடில்லியிலும், ஏனைய இந்தியப் பிரதேசங்களிலும் நிலவும் உணர்வு நிலைதான் எப்போதும் தொடரும் என எதிர் பார்க்க முடியாது. இலங்கையில் யுத்தம் வெடித்து, தமிழர்கள் பாதிக்கப்படும்போது இந்தியாவில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உணர்வு நிலை தலைகீழாக மாறி, எழுச்சி கொள்ளும் ஆபத்தும் உண்டு என்ற விடய மும், அத்தகைய நிலைமையின் விபரீதமும் கூட இலங்கை அரசுத் தலைமைக்குத் தற்போது விளக்கமாக இந்தியத் தரப்பால் எடுத்துக் கூறப் பட்டதாகத் தெரிகின்றது.

இந்தியா மட்டுமல்ல, சர்வதேச உலகமுமே ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கின்ற நிலைமை தான் இப்போதுள்ளது. எனவே, தனது திட்டத்தை வெளிப்படுத்தாமல் இலங்கை அரசு இனிமேலும் காலத்தை இழுத்தடிக்கக் கூடாது. சமஷ்டி அடிப்படையிலான அல்லது அதை ஒத்த ஒரு தீர்வு யோசனையை அரசுத் தரப்பு முன்னெடுப்பது இலங்கை அரசுக்கு சர்வதேச ஆதரவை அதிகரிக்கச் செய்யும் என்றும் இந்தியத் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டதாம்.

யுத்தம் தீர்வல்ல. அரசியல் இணக்கப் பாட்டுக்கு முயலுங்கள். நோர்வேயின் அனு சரணைப் பணியை முழு அளவில் பயன் படுத்த எத்தனியுங்கள். நோர்வேயை விட அனுசரணைப் பணிக்கு வேறு பொருத்தமான மாற்றுத் தரப்பு இல்லை. இப்படி இந்தியா மேலும் வலியுறுத்தியதாகவும் தெரிகின்றது.

நன்றி

ஊடறு இணையத்தளம் தமிழ்பெண்களுக்கு செய்த ஊறு.

ஜூலை 6, 2006

நடவாத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து எழுதி பணம்சம்பாதிப்பது ஒருவகை,அதில் இது எந்தவகை?

  • ஊடறு இணையத்தளம் தமிழ்பெண்களுக்கு செய்த ஊறு.
  • இப்போது என்ன செய்யப்போகிறது இந்த இணையத்தளம்?
    -ஈழபாரதி-

    சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் “கர்ப்பிணி” அல்ல: சந்திரா பெர்னாண்டோ

    சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது:

    கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.

    தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந்துள்ளார்.

    தற்கொலைப் பெண் ரம்புக்கனை, வெலிவேரிய பகுதிகளில் தங்கவைக்க வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்ய முச்சக்கர வாகனம் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

    அப்பெண்ணுக்கு உதவியதாக ரம்புக்கனவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் மற்றும் ஒரு ஆண் ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தற்கொலைப் பெண் மஞ்சுளாதேவி (வயது 32) என்று தெரியவந்தது.

    தற்கொலைப் பெண்ணின் உடற்பாகங்களைச் சோதனைக்குட்படுத்தியபோது அவர் கர்ப்பிணி இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார் சந்திரா பெர்னாண்டோ.

    நன்றி>புதினம்.

    புலிகள்மீது தாக்குதலைநடத்த சரியான நேரம் இது-சோமவன்சா.

    ஜூலை 6, 2006

    தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இராணுவத் தாக்குதலை நடத்த சரியான நேரம் இது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க யோசனை தெரிவித்துள்ளார்.
    கொழும்பு நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் சிறப்பு மாநாட்டில் சோமவன்ச அமரசிங்க பேசியதாவது:
    அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்று பலமுறை எங்களுக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இது விடயத்தில் எங்களுக்குச் சில கருத்துகள் உண்டு.
    தனது செயற்பாடுகளின் மூலம் மகிந்த ராஜபக்ச தன்னை நிரூபிக்க வேண்டும்.நாட்டினது தற்போதைய மோசமான பாதுகாப்பான சூழ்நிலை உட்பட அரசாங்கத்தை ஆதரிக்க போதுமான காரணங்கள் உள்ளன. பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டுமெனில் எது பயங்கரவாதம் என்பதை மகிந்த ராஜபக்ச தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
    யுத்தத்தின் அடிப்படையே தாக்குதலும் தற்காப்பும்தான். நம்மை தற்காத்துக் கொள்ளுவதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தைத் தோற்கடித்துவிட முடியாது.
    இப்போது இராணுவத் தாக்குதல்களுக்கு அரசாங்கம் மாற வேண்டிய அதி உச்ச நேரம் இது.இந்த நாட்டின் தலைவர் என்கிற வகையில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மகிந்தவுக்கு உண்டு.
    அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகளும் தனிஈழத்தை அமைப்பதற்காக விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றனர். சிறிலங்காவை ஒரு தோல்வியடைந்த நாடு என்று அமெரிக்காவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளமை குறித்து சந்தேகங்கள் உள்ளன.
    சூடான், சோமாலியா நாடுகளின் நிலைமை வேறானவை. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவை நாங்கள் பாதுகாப்போம்.
    அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் ஒரு ஆட்சியாளர் இல்லாத தோல்வியடைந்த நாடாகத்தான் நிச்சயம் சிறிலங்கா உருவாகும். உள்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது.
    சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யாதிருப்பது முட்டாள்த்தனமானது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படும் வரை பேச்சுக்களுக்கு அரசாங்கம் செல்லக் கூடாது. தற்போது அவர்கள் அமைதிப் பேச்சுக்கள் மூலமான தீர்வுக்கு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழீழ விடுதலைப் புலிகளிடம் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்கள் அதிலிருந்து விலகினால் அவர்களுக்கு முறையான கல்வி மற்றும் வேலைக்கான உத்திரவாதத்தை அரசாங்கம் அளிக்க வேண்டும். அவர்கள் விலகிவந்தால் அந்த இளைஞர்களுக்காக எமது ஜே.வி.பி. உறுப்பினர்கள் தங்களது பணிகளை தியாகம் செய்வதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை என்றார் சோமவன்ச அமரசிங்க.
    இக்கூட்டத்தில் இனப்பிரச்சனை தொடர்பான 5 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
    இனப்பிரச்சனையானது உள்நாட்டுப் பிரச்சனை- உள்நாட்டு விடயத்தில் சர்வதேச சக்திகள் தலையிட அழைக்கக் கூடாது- நாட்டினது இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ள சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று அன்று அந்த தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நன்றி>பதிவு.