ஜூலை 5th, 2006- ‍க்கானத் தொகுப்பு

ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு றோ நிதியுதவி.

ஜூலை 5, 2006

தமிழ் மக்கள்,தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமானவர்கள் என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கையில் உருவாக்கி மற்றுமொரு இனக் கலவரத்திற்கு தூபமிடுவதாக குற்றம்சாட்டியிருக்கும் `சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம்’, ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்தியாவின் உளவுத்துறையான றோவுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாகவும், `றோ’ ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகவும் மேலும் தெரிவித்திருக்கிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நிப்போன் ஹேட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
`சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்வூடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவ்வியக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான நிர்மால் ரஞ்சித் கருத்து தெரிவித்தபோது;
இலங்கையில் பயங்கரமானதோர் சூழ்நிலை உருவாகியிருப்பதாக கூறிக் கொண்டு தென்னிலங்கையில் உள்ள ஏனைய பல பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயலுகிறது. நாட்டு மக்களை பதற்றமான ஒரு சூழ்நிலைக்குள் வைத்திருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
1983 இல் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மறந்து விட முடியாது. அதுபோன்ற வரலாற்றுத் தவறுகள் இனிமேல் நடைபெறக் கூடாது. தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டது.
இன்று யுத்தத்தை ஆசீர்வதிக்கும் வீறாப்புப் பேச்சுகள் பேசப்படுகின்றன.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தை வழங்கப்போகிறோம் அல்லது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு என்னதான் வழி என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
அஜித் பெரக்கும் ஜயசிங்க
ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சியினரின் போருக்கு ஆதரவான பிரசாரங்களால் முழு இலங்கையும் ஆபத்தான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பான `றோ’ வுடன் இரகசிய தொடர்புகளை பேணி வருகிறார். இலங்கையில் ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு `றோ’ பெருமளவில் நிதியுதவியளித்து வருகிறது.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஷியாம் சரணின் இலங்கை விஜயம் உற்று நோக்கப்படுகிறது. அவர் இந்தியப் பிரதமரின் சிறப்பு செய்தியுடன் இங்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையொத்த அதிகாரப் பரவலாக்கலையே இலங்கையில் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது.
இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அனுசரணைப் பணியை மேற்கொள்ளும் நோர்வே அரசாங்கம் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்தமையானது இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் ஏற்பட வழியமைத்துள்ளது.
என்லி பெரரோ
தமிழ் மக்கள் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமானவர்கள் என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கையில் உருவாக்கி மற்றுமொரு இனக்கலவரத்திற்கு தூபமிட சிலர் முயலுகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நீர்கொழும்பில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு அங்கு வாழும் தமிழர்கள் சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படுகிறார்கள். கைதுகளின் போது தமிழர்கள் மனிதாபிமானமாக நடத்தப்படுவதில்லை.
நாட்டுப் பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவினர் உண்மையில் நாட்டுப்பற்றாளர்கள் அல்ல. அவர்கள் நாட்டினைப் பிரிப்பதற்கே துணை போகின்றனர் என்றார்.
அதேவேளை, `சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம்’ 1983 இல் நடைபெற்ற ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், அதேமாதிரியான ஒரு சம்பவம் இனிமேல் நடைபெறதிருப்பதை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் பாத யாத்திரை ஒன்றை கொழும்பில் நடத்த திட்டமிட்டிருக்கிறது.
இதனுடன் இணைந்து அன்றைய தினம் விகாரமஹாதேவிப் பூங்காவில் கலாசார நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், `முழு இலங்கையும் அபாயத்தில் நாம் செய்யக் கூடாதது என்ன?’ என்ற தலைப்பில் கருத்தரங்குகளை நடத்த இவ்வியக்கம் திட்டமிட்டுள்ளது.

நன்றி>பதிவு.

இந்திய அரசு புலிகளை ஆதரிக்க வேண்டும்.

ஜூலை 5, 2006

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் குமுதம் பத்திரிகைச் செவ்வியில்

இலங்கைத் தமிழர் பிரச்னையில், நார்வே அரசின் சமாதான முயற்சிகளில் மிக முக்கிய பங்காற்றியவர் இலங்கைத் தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். விடுதலைப்புலிகள், முஸ்லிம் தலைவர்கள், மிகவும் செல்வாக்கான சிங்கள அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களுடன் ஜெயபாலனுக்கு நெருக்கமான நட்பு உண்டு. நார்வேயிலிருக்கும் அவர் கடந்த வாரம் சென்னை வந்திருந்தபோது, அவரைச் சந்தித்தோம்.

இப்போது ஏற்பட்டிருக்கும் அறிவிக்கப்படாத போருக்கு உண்மையில் யார் காரணம்?

இலங்கை அரசாங்கம்தான். 2002இல் ஆஸ்ரோவிலும் 2006இல் ஜெனிவாவிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், உலக நாடுகளுக்கு முன்னால் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கு இரண்டு தரப்பினரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கை அரசின் துணை இராணுவக் குழுக்களை கலைத்து விடுவது, உயர்பாதுகாப்பு வளையம் என்கிற பெயரில் தமிழர்களை வெளியேற்றி கைப்பற்றி வைத்திருக்கிற இடங்களில் தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது உட்பட அப்போது ஏற்றுக்கொண்ட எல்லாவற்றையுமே இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

மட்டுமல்லாமல், கருணா குழுவினர் என்கிற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களையும் அதிகரித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆயுதம் தாங்கிய ஒரு விடுதலை அமைப்பு, அச்சம் அடைவதும் எதிர்த்தாக்குதல்களை அதிகரிப்பதும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். புலிகளின் வன்முறைகளை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது அவர்களின் எதிர்த்தாக்குதல் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணின் எதிர்தாக்குதல் போன்றதுதான்.

கருணா இப்போது எங்கே இருக்கிறார்?

தாய்லாந்து, மட்டகளப்பு, கொழும்பு, இந்தியா என்று பல்வேறு விதமான தகவல்கள் உலாவுகின்றன. ஆனால், புலிகளுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படையாகவே அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஆதரவு கருணாவுக்கு இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கவும் சிங்களர்கள் முயற்சிக்கிறார்கள். அது உண்மையல்ல.

இப்போதுள்ள பதட்டமான சூழ்நிலைக்கு உடனடி தீர்வு என்ன?

துணை இராணுவக் குழுக்களை அரசு கலைத்து விடுவதும் விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிடுவதும் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய உளவுத்துறையினரின் ஆதரவைப் பெறலாம் என்கிற தவறான ஆலோசனையின் அடிப்படையில்தான், நிழல்யுத்தத்தை இலங்கை அரசாங்கம் தொடங்கியது. இந்திய அரசாங்கம் அப்படியான ஆதரவு கிடைக்காது என்பதை புலப்படுத்தியிருக்கிறது. எனவே இப்போதைக்கு பின்வாங்கியிருக்கிறது. எனினும் இன்னும் தெளிவாக இந்தியா தன் நிலைப்பாட்டை புலப்படுத்தும்போது, நிழல்யுத்தத்தைக் கைவிட்டுவிட்டு இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும்.

நேரடியான பேச்சுவார்த்தைக்கு வரும்படி இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறாரே?

ராஜபக்சேவின் இந்த அழைப்பு தந்திரமானது. உலக நாடுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் துணையுடன் நார்வே மேற்கொண்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையை முறியடிக்கவும், முடக்கவும், இப்போது நேரடியாகப் பேசுவோம் என்கிறார் அவர்.

இந்தியா என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

விடுதலைப்புலிகளும் இந்திய அரசும் நிறைய தவறுகளை செய்துவிட்டார்கள். ராஜீவ்காந்தி கொலை மிகவும் பிரதானமான தவறு. எனினும் இரண்டு தரப்பினரும், இருவரின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, தங்கள் தவறுகளை உணர்ந்து அவற்றைக் கடந்து வரலாற்றை வெற்றிகரமான பாதையில் நகர்த்திச் செல்லவேண்டும். புலிகள் தவறு செய்திருக்கிறார்களே ஒழிய, அவர்கள் இந்தியாவின் எதிரிகள் அல்ல. முரண்பட்ட தன் மகனை அரவணைத்துக் கொள்ளும் குடும்பத் தலைவனைப் போல இந்திய அரசு புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கலைஞர் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறீர்களா?

கலைஞர் எங்களுக்காக நிறைய செய்திருக்கிறார். குறிப்பாக அகதிகள் தொடர்பான அவரது பங்களிப்புகள் முக்கியமானவை. இலங்கை பிரச்னை காரணமாக ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், பல்வேறு நெருக்கடிகளையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர், இலங்கைத் தமிழர்கள் விடுதலைக்கு தன் ஆட்சிக் காலத்திலேயே வழிசெய்து கொடுப்பார் என்கிற அச்சம் சிங்களர்கள் மத்தியில் இருக்கிறது. மேலும் ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், புதிய தலைமுறை மார்க்சியவாதிகள் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறார்கள். இது எங்களிடையே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வதேச உதவியில்லாமல் அகதிகள் பிரச்னையை தமிழகத்தால் மட்டும் தீர்க்க முடியாது. ஆனாலும், தங்களது பொருளாதார நிலையில் செய்யக்கூடியதை கலைஞர் அரசு செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நார்வே சமீபத்திய நிகழ்வுகளால் சோர்வடைந்திருப்பது போல் தெரிகிறது. அவர்கள் பேச்சுவார்த்தையிலி ருந்து வெளியேற வாய்ப்புள்ளதா?

நார்வே சமாதான தூதுவர் எரிக் சோல்கைம் எனக்கு மிக நெருங்கிய நண்பர். ஐரோப்பிய யூனியன் தடை காரணமாக புலிகள் எடுத்த நிலைப்பாடு, உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மீறுவது போன்றவை நார்வேயைச் சோர்வடையச் செய்துள்ளது உண்மைதான். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையிலிருந்து நிச்சயம் வெளியேற மாட்டார்கள்.

பெரிய யுத்தம் வர வாய்ப்புள்ளதா?

எதிர்த்தாக்குதலுக்கு புலிகளைத் தூண்டி அதன்முலம் பயங்கரவாதிகளாக அவர்களைக் காட்டுவதுதான், இலங்கை அரசின் நிழல்யுத்தத்துக்கான அடிப்படைக் காரணம். ஆனால், இது புலிகளுக்குத் தெரியும். எனவே அவர்கள் எதிர்த்தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள். நிச்சயம் பெரிய யுத்தம் வராது. யுத்தம் தொடர்பான அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. யுத்தம் ஏற்பட்டால் மொத்த இலங்கையும் அழியும்.

சந்திப்பு : தளவாய் சுந்தரம்

நன்றி> குமுதம்