ஜூலை 3rd, 2006- ‍க்கானத் தொகுப்பு

ஐரோப்பிய பிரதிநிதிகள் செப்.1 முன் வெளியேற வேண்டும்.

ஜூலை 3, 2006

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் யாவரும் செப்ரெம்பர் முதலாம் திகதியோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் இருந்து வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நன்றி>பதிவு.

ஐரோப்பியத் தடை தவறு, அயர்லாந்து தலைவர் மக்கன்ஸ்.

ஜூலை 3, 2006

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது பாரிய தவறு என்று வட அயர்லாந்து விடுதலை அமைப்பின் முன்னாள் தலைவர் மக்கன்ஸ் தெரிவித்துள்ளார்.

வட அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏயின் முன்னாள் தலைவரும் அதன் அரசியல் பிரிவான சின்பெய்ன் பிரதிநிதியுமான மார்ட்டின் மக்கன்னஸ் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.
கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது.

விடுதலைப் புலிகளின் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப்பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மக்கன்ஸ் கூறியதாவது:
நாம் அயர்லாந்திலிருந்து வந்திருக்கிறோம். உலகில் மிகவும் வெற்றிகரமான அமைதிப் பேச்சுவார்த்தையை நாம் நடத்தியிருக்கிறோம். எமது சின்பெய்ன் இயக்கத்தின் அனுபவங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது சிறிலங்காத் தரப்பினருடனும் பகிர்ந்து கொள்ள உள்ளோம் எம்மீது பிரித்தானியா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதித்திருந்த நிலையில்தான் நாம் பேச்சுக்களை நடத்தினோம்.

அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏ.வில் 1970 ஆம் ஆண்டில் தனது 20 ஆவது வயதில் மக்கன்ஸ் தன்னை இணைத்துக் கொண்டார். ஐ.ஆர்.ஏவின் இரண்டாம் நிலை தலைவராக 21 வயதில் பொறுப்பேற்றார்.

அயர்லாந்து விடுதலை அமைப்பான சின்பெய்ன் இயக்கத்தில் மூத்த தலைவராக உருவான மக்கன்ஸ் 1972 ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன் நடந்த பேச்சுக்களில் பங்கேற்றார். அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பல்வேறு பேச்சுக்களில் அவர் கலந்து கொண்டார்.
புதிய வட அயர்லாந்து சபையின் கல்வி அமைச்சராக 1999 ஆம் ஆண்டு நவம்பரில் தெரிவு செய்யப்பட்டார்.

நன்றி>பதிவு

சர்வதேச ரீதியில் மீண்டும் வலை விரிப்பும் வியூகமும்.

ஜூலை 3, 2006

இலங்கை இனப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளாலும் அமைதி வழியில் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வுகாணும் விடயத்தில் பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல், கேந்திர, அரசியல் அபிலாஷைகளும், கொள்கை நிலைப்பாடுகளும், அதிகார வீச்சுகளும் அளவுக்கு அதிகமாக தலையீடு செய்யும் ஆபத்து இருப்பது குறித்து இப்பத்தியில் ஏற்கனவே பலதடவை சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

ரணிலின் முன்னைய ஐ.தே.கட்சி அரசு, தமிழீழ விடு தலைப்புலிகளுடன் அமைதி முயற்சிகளை ஆரம்பித்த காலத்திலேயே இத்தகைய தலையீடுகள் இருந்து வந்தமையை அனைவரும் அறிவர்.

உலக நாடுகளின் திரள்வான சர்வதேச சமூகம், அப்போதே அந்த சமாதான முயற்சிகளின்போது தீர்வுக்கான வரம்புகளை வரையறைகளை தமது விருப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இயைவாகத் திணிக்கத்துணிந்தமை எமது வரலாற்றுப் பட்டறிவு.

சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலிகளை அமுக்கிப் பிடிக்கும் தனது திட்டத்தையே ரணில் விக்கிரசிங்க தமது “சர்வதேச பாதுகாப்பு வலையப்பின்னல்’ என்ற சதியாக விரிக்க முயன்றார்.

தமது உரிமைகளை மீளப் பெறுவதற்கான தேடலில் போராட்டத்தில் முறையற்ற அந்நியர் தலையீடு, தமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் தாமே தீர்மானிக்கும் சுயாதீன உரிமையைப் பாதிக் கிறது பறிக்கிறது என்ற மெய்மை நிலையை உய்த்து ணர்ந்து கொண்ட தமிழர் தரப்பு விடுதலைப்புலிகள் இயக்கம் தமது தந்திரோபாயக் காய் நகர்த்தல்கள் மூலம் இந்தச் சதிவலைப் பின்னலில் சிக்குண்டு அவதியுறாமல் தம்மை சாமர்த்தியமாகத் தவிர்த்துக்கொண்டது. அது நடந்து முடிந்த கதை.

இப்போது தென்னிலங்கையில் ஒரு குழப்பமான சிந்தனைத் தெளிவற்ற கொள்கை நிலைப்பாட்டில் ஒருங்கிசைவற்ற ஓர் ஆட்சிப்பீடம் அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில்
அதனைத் தமது இசைவுக்கு ஏற்ப வழிநடத்த முடியாமல் திணறும் சர்வதேச சமூகம், தமிழர் தரப்பையாவது நெருக்குவாரப்படுத்தித் தனது வழிக்குக் கொண்டுவர எதிர்பார்த்துத் தோற்றுப்போய் நிற்கிறது. இந்தப் பின்னணியில் தமிழர் தரப்புக்கு எதிராக மற்றொரு சர்வதேச சதிவலைப் பின்னல் இழைக்கப்படுகிறது என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பை அம்பலப்படுத்துவதே இப்பத்தியின் இன்றைய நோக்கமாகும்.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வீச்சை மடக்கு வதற்கான வியூகத்தை ஐ.நா.மட்டத்தில் வகுக்கும் எத்தனங்கள் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன எனத் தெரிகின்றது.

அதன் ஒரு கட்டமாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சார்பில் அவரின் இரு தூதுவர்கள் விரைவில் கொழும்பு வருகின்றனர்.

யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர் பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி யாக இலங்கையைச் சேர்ந்தவரான ராதிகா குமாரசுவாமி அம்மையார் உள்ளார். அவரின் சார்பில் உயர்மட்ட ஐ.நா. தூதுவராக அலன் றொக் என்பவர் கொழும்புக்கு வந்து இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி விரைவில் நேரடியாகக் கொழும்பு வரவிருக்கிறார் எனத் தெரிகின்றது. அவரும் இலங்கையில் யுத்தப்பிரதேசத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றிய நிலைவர அறிக்கை யொன்றைத் தயாரிப்பார் எனத் தெரிகின்றது. குறிப்பாக சட்டத்துக்கு முரணான முறையில் இடம்பெறும் கொலைகள், அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்கள் போன்றவை குறித்து ஒரு மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பது அவரது திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் உள்ள யுனிசெவ் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலமும் அறிக்கை களைப் பெற்றுக் குவிக்கும் திட்டம் ஒன்றும் ஐ.நா. மட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது.

இத்தகைய அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகளின் மதிப்பீட்டு அறிக்கைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை மையப்படுத்தி, அதன் வழியாக ஐ.நா.வின் தலையீட்டுக்கு கால்கோள் இடுவதற்கான திட்டங்கள் சில மட்டங்களில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றன என நம்பகரமாகத் தெரிகின்றது.

இந்த வலைவிரிப்பு, வியூக வகுப்பு போன்றவை குறித்து முன்னெச்சரிக்கையாக இருந்து, ரணிலின் கால சர்வதேச வலை விரிப்பை முறியடித்தமைபோல இவற்றையும் செயலிழக்கச் செய்வதற்கான தந்திரோபாய நகர்வை தமிழர் தரப்பு இப்போதே ஆரம்பிப்பது அவசியமும், அவசரமுமாகின்றது.

வெறும் அறிக்கைகள், பேச்சுகள், வெளியீடுகள், பிரகடனங்கள் மூலம் இந்த வலைவிரிப்பை முறியடிக்க முடியாது. இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக் கணைகளை களத்தில் எதிர்கொண்டு, செயல் நடத்தைத் திறம் மூலம் அவற்றை முறியடித்து, முன் நகர்வதே புத் திசாலித்தனம். அதற்கு நம்மை நாமே தயார் செய்யும் காலமாக இது அமையட்டும்.

நன்றி>உதயன்

இந்தியாவின் சிறப்புப் தூதுவர் இலங்கை விரைவில் பயணம்.

ஜூலை 3, 2006

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலையை அறிய இந்திய அரசாங்கம் சிறப்புத் தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செயலாளர் சியாம் சரணே இலங்கைக்கு வரவுள்ளார். இவர் இந்திய அரசாங்கத்தின் முக்கிய செய்தியுடன் இலங்கை வரவுள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகள் மிகவும் சீர்கெட்டுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் சியாம் சரண் அவசரமாக பேச்சு நடத்த அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு வருகை தரவுள்ளார்.

சியாம் சரணின் சிறிலங்கா வருகை குறித்து உத்தியோகப்பூர்வமாக அரச செயலகம் அறிந்திருந்த போதிலும், இத்தகவலை இரகசியமாக வைத்திருக்க முயற்சி செய்து வருகிறது.

இந்திய அரசின் அக்கறை குறித்து சிங்கள இனவாதிகள் அறிந்து கொண்டால், மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தினால் சியாம் சரணின் வருகையை அரச செயலகம் மறைக்க முயற்சித்துள்ளது.

வடக்கு – கிழக்கில் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுக்களினாலும் நடத்தப்பட்டு வரும் படுகொலைகள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளதுடன், அது குறித்து விவரங்களை அறியவும் முயற்சியெடுத்து வருகிறது.

நன்றி>பதிவு