மே 31st, 2006- ‍க்கானத் தொகுப்பு

சர்வதேசத்தின்மீது தமிழர்கள் அவநம்பிக்கை.

மே 31, 2006

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையுடன் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்பமாக சர்வதேச சமூகத்திடம் இருந்த நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. இதனை வன்னிப் பெருநிலப் பரப்பில் வெகுசன ஒன்றியத்தினர் வெளியிட்ட அறிக்கையே வெளிக்காட்டி நிற்கின்றது.

அவ்வறிக்கையில், “எமது மக்கள் கொல்லப்படும்போது தனது கண்களை இறுகப் பொத்திக் கொள்ளும் சர்வதேசம் சிங்களவர்களின் தலைமயிர் உதிரும்போதுகூடக் கண் விழித்துக் கொண்டு உரத்த குரல் எடுக்கின்றது. இவற்றின் மூலம் ஒரே ஒரு முடிவிற்கு வருகின்றோம்.நாடற்றவர்கள் உலகில் வாழும் தகுதியற்றவர்கள். அவர்கள் விலங்குகளுக்கும் கீழான நிலையிலேயே கணிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதியற்ற செயல் குறித்துத் தமது வேதனையை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் உலக நாடுகளின் அதிகார வர்க்கத்தின் செயற்பாடுகள் குறித்து நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளனர். ஏனெனில், நீண்ட போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்து எவருமே கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நீதியான போராட்டத்திற்கு அவை என்றுமே ஒத்துழைத்ததில்லை.

நீதியான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காதுவிடினும், தமிழ் மக்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகள் உண்டு என்ற அடிப்படையில் அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத்தானும் அவை தயாராக இருந்ததில்லை. மாறாக, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் நசுக்க முற்படும் அரசிற்கே அவர்கள் ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.

ஒரு தரப்பினரால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நியாயப்பாடு சர்வதேச மயப்படுத்தப்பட்டு சரியான முறையில் உலக நாடுகளிடம்எடுத்துச் செல்லப்படவில்லை எனக் கூறப்படுவதுண்டு. சரி அவ்வாறு தான் வைத்துக் கொண்டாலும், சர்வதேச சமூகமே கரிசனை செலுத்தியதாகக் கூறப்படும் சுனாமி அனர்த்த புனர்வாழ்வுப் பணிகளில் சிறிலங்கா தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியமை சர்வதேச சமூகத்திற்குத் தெரியாத தொன்றா?

இதனைச் சர்வதேச சமூகம் தெரியாது எனக் கூறுமாயின் அதனைவிட மோசடித்தனமான விடயம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில், ஐ.நா. செயலாளர் கொபி அனானில் இருந்து அமெரிக்காவின் முன்னாள்; சனாதிபதி பில் கிளிங்டன் வரையில் இவ்விடயத்தில் நேரடியாகக் கரிசனை காட்டியிருந்தனர். இலங்கையில் சுனாமியால் தமிழ் மக்களும் பேரழிவைச் சந்திருந்தனர் என்பதைத் தெரிந்திருந்தனர்.

ஆனால், அவர்களால் கூட தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகளைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதற்கு அவர்கள் இயலாது போய்விட்டது எனக் காரணம் கூறினால் அது நகைப் பிற்கிடமானதாகிவிடும். உரிமைக்காகப் போராடுகின்றார்கள் என்பதற்காக தமிழ் மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

இது தனியாக அரசுகள் இடத்தில் மட்டும் காணப்படும் போக்கல்ல. தம்மை உலகில் மனித நேய அமைப்புக்களாகவும், பாதிக்கப்படும் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் உதவி வழங்கும் அமைப்புக்களாகவும் கூறிக்கொள்ளும் அமைப்புக்களுக்கும் பொருத்தப்பாடானவையே. ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகள் குறித்து அக்கறை காட்டாத அவ் அமைப்புக்கள் ஒடுக்குமுறை அரசுகளின் நலன்கள் பாதிக்கப்படாது பார்த்துக்கொள்வதில் பெரும் கவனம் செலுத்துகின்றன. இதற்கு ஐ.நா. அமைப்புக்கள்கூட விதிவிலக்காக இல்லை.

சரி, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் பல கொலைகளைப் புலிகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியம் யுத்த நிறுத்த காலத்தில் இடம்பெற்ற அனைத்துக் கொலைகளுக்கும் புலிகள் தான் காரணம் எனக் கருதுகின்றதா?

அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அல்லைப்பிட்டிப் படுகொலை, விடுதலைப்புலிகளின்; மூத்த உறுப்பினர்கள், சிரேஸ்ட தளபதிகள் மற்றும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் நடந்த படுகொலைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர் கடத்தல் யாவற்றிற்கும் புலிகள்தான் காரணம் என்று கருதுகின்றதா?

அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் கருதுமாக இருந்தால் அதனதுடன் பேசிப் பயனில்லை. அவ்வாறு இல்லை எனில், விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைவிட சிறிலங்கா இராணுவமும், அதன் ஏவுதலில் இயங்கும் ஒட்டுக்குழுக்களும் புரிந்த படுகொலைகள் அதிக அளவிலானதாகவும், ஆதாரபூர்வமானவையாக நிரூபிக்கத்தக்கவையாகவும் உள்ளன. ஆனால், இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்களுக்குத் தெரியாதுபோனது ஏன்? படுகொலைகள் புரிய அரசிற்கு அங்கீகாரம் உண்டு என்பதினாலா?அவ்வாறானால் தம்மைப் பாதுகாத்தல் தமிழருக்கு உரிமை இல்லையா?

ஆனால், இவை எல்லாவற்றையும் கண்டு கொள்ளாது ஆட்சி அதிகாரம் அற்ற இனம் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேசநாடுகள் மீதும், அமைப்புக்கள் மீதும் எவ்வாறு மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும். அவர்களை ஒடுக்குமுறையாளர்களின் அனுசரணையாளர்கள் என்று கூறாது, நீதியின் காவலர்கள் என எவ்வாறு கூறமுடியும்?

நன்றி: ஈழநாதம்

மகிந்தவுடன் புலம்பெயர் கனடா தமிழர் போர் பிரகடனம்!

மே 31, 2006


அன்பான உறவுகளே!

எமது உறவுகள் நாளும் எம் தாயக மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். நாயைப் போல், தெருவிலும், பயிலும் இடத்திலும், தொழிலகத்திலும், படுக்கையிலுமாக எம் உறவுகள் குதறப்படுகின்றனர்.

நான்கு வருடம் சர்வதேசத்தின் வேண்டுதலுக்காக எம் உறவுகள் ஒரு சமாதானப் பயணத்தில் நம்பிக்கையுடன் பயணித்தனர். என்ன நடந்தது? சமாதானம் வந்ததா? தீர்வு கிட்டியதா? ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமே நான்கு ஆண்டுகளின் பின் தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கின்றது.

முதலில் இயல்பு வாழ்க்கை வரும் என்றது சர்வதேசம். இன்று எம் மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள தங்கள் வாழ்விடங்களைவிட்டே ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக்கிரமிப்பு நாய்களின் வெறியாட்டம் எங்கும் தலைவிரித்தாடுகின்றது.

இந்நிலையில் தான் உதவுகிறேன் நம்புங்கள் என்று வந்த சர்வதேசமும் மனிதத்தை தொலைத்துவிட்டு நிற்கின்றது. வழிசமைத்து கொடுப்பதை விடுத்துவிட்டு, வழியடைத்து படுகொலை ஒன்றிற்கு துணைபோகின்றது.

தாயகத்தில் ஒரு இனப்படுகொலையை நடாத்தியவாறு, புலம்பெயர்ந்த மக்கள் மீதும் வீண்பழி சுமத்தி, அங்கும் அவர்களை வாழா மடந்தையாக்க சிங்களத்தின் மகிந்தர் முனைந்து நிற்கின்றார்.

இன்று, எம் தாயக உறவுகளுக்காக, அவர்கள் உண்மை நிலையை சர்வதேசத்திற்கு வெளிக்கொணருவதற்காக சர்வதேசமெங்கும் ஒன்றுகூடி நிற்கின்றோம். இவ்வொன்று கூடலை எமது அடுத்த நகர்வுகளின் படிகற்களாக கொள்வோம்.

ஆம், நாம் சிந்தித்து ஒற்றுமையுடன் விரைந்து செயலாற்றும் காலம் இன்று எம் முன்னால் விரிகின்றது. துன்பத்தை தருபவனுக்கு அந்த துன்பத்தை திருப்பிக் கொடுப்போம். எம் உறவுகளை சர்வதேசத்தில் இருந்து அன்னியப்படுத்தி அவர்களை ஒரு பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கி, அடிமைப்படுத்தி விடலாம் என மகிந்தர் கனவு காண்கின்றார்.

இன்று, 12 நாடுகளில் நாம் அணிவகுத்து நிற்கின்றோம். நாங்கள் சர்வதேசத்தில் அதன் குடிமக்களாக நிமிர்ந்து நிற்கின்றோம். 2006ஆம் ஆண்டின் தோற்றுப் போன தேசங்களில் ஒன்றான அறிவிக்கப்பட்டுள்ள சிறீலங்காவை சர்வதேசத்தில் இருந்து முழுமையாக அன்னியப்படுத்துவோம்.

முதலில், எம் உறவுகள் மீது ஏற்கனவே ஒரு உத்தியோகப்பற்றற்ற பொருளாதாரத் தடையை விதித்திருக்கும், மதிந்தருக்கு அதிர்ச்சி வைத்தியமான எமது பொருளாதாரத் தடையை அமுல்செய்வோம். சிறீலங்கா அரசின் பொருட்களின் கொள்வனவுகளை எமது புலம்பெயர்ந்த நாடுகளில் தவிர்ப்போம். தற்போது உள்ள சரக்குக்கள் போக தொடர்ந்த சிறீலங்கா அரச பொருட்கள் தொடர்பான கொள்வனவுகளை நிறுத்துமாறு எமது வணிகர்களை அன்புடன் வேண்டுவோம்.

மாற்றீடான கொள்வனவுகள் உண்டு என்பதால், அது குறித்த முயற்சிகளில் உடன் கவனம் செலுத்துமாறு வணிகர்களை வேண்டுவோம். எமது கொள்வனவுகளால் மட்டும், பல மில்லியன் டொலர்களை மகிந்தர் அரசு வருவாயாகப் பெறுகின்றது என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். எம்பணத்தில் எம் உறவுகளை கொல்லுகின்றார் மகிந்தர்.

புலம்பெயர்ந்த 8 லட்சம் தமிழர்ளை வேறு மதிந்தர் சீண்டிப் பார்க்கின்றார். அவருக்கு பதில் சொல்லும் வலுவில், வல்லமையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாம் இருக்கின்றோம்; என்பதை உடன் காட்டும் முயற்சியில் இது வெறும் ஆரம்பமே. வரும் நாட்களில் மேலும் பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். எமது வர்த்தகர்களுக்கு பங்கம் வராத வகையிலும் எமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் கனடா தினமான வரும் யுூலை 1ஆம் நாள் முதல் முழுமையான சிறீலங்கா பொருட்களின் புறக்கணிப்பை அனைவருமான முன்னெடுப்போம்.

சமாதானத்திற்கான கனடா தமிழர்கள்

நன்றி>சங்கதி.

இதேபோன்று ஜரோப்பிய, அவுஸ்ரேலிய தமிழரும், வர்தகர்களை பாதிக்காதவாறு போராட முன்வரவேண்டும், வர்தகர்கள் இந்தியா, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தமது வர்தகபொருட்களை இறக்குமதி செய்து இப்போராட்டத்துக்கு ஆதரவு நல்க வேண்டும்.