
நமது நாட்டின் பக்கம் உலகின் கவனத்தைத் திருப்பி நாம் நமது நாட்டின் சிறப்புப் பற்றியும், ஆற்றல் பற்றியும் பாட்டிலேபாடி சொல்லிலே சொல்விட்டோம். நீர்வளம் உண்டு. நிலவளம் உண்டு. என்றெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப்பினர் வழி முழுவதும் கயஸ்வாகனம், சினிமாவின் வருகை, எல்லாம் சரி எமது நாட்டின் கல்விநிலை பற்றிக் கேட்டால் நாம் வெட்கித்தலை குனியும் நிலைதான் இருக்கிறது.
அண்மையில் யாழ் பல்கலைக்கழக உதவி நூலகரினால் கல்லூரிகளின் அதிபர்கள்,ஆசிரியர்களுக்கான நூலகமும் அதன் பயன்பாடும் பற்றி ஒரு கருத்தமர்வு நடாத்தப்பட்டது. ‘கற்றது கைமண்ணளவு’ என்று தொடங்கியவர் நாம் கற்றறிந்தது 1 வீதமான அறிவுதான் மீதி 99 வீத அறிவை எங்கே? எப்படி? பெற்றுக்கொள்வது என வினா எழுப்பினார். உண்மையிலேயே 99 வீத அறிவை உலக நூலகங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்பதைத் தெளிவு படுத்தினார்.
நூலகம் பாடசாலைகளிலும் இருக்கவேண்டும். ஆனால் எமது வன்னிப் பெருநிலப்பரப்பு பாடசாலைகளில் நாம் படிக்கும் காலம் தொட்டு இன்றுவரையும் ஒரு சிறிய அறையில் விளையாட்டு உபகரணங்கள், விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள், மனையியற் கூட உபகரணங்களுடன் கூடவே நூலக புத்தகங்களும் அடுக்கப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் இருப்பதற்கு இடமில்லை. அப்படியிருக்கும்போது எப்படி நல்ல நூல்களைத்தேடி எடுத்துக் கற்கமுடியும். அன்று பாட்டி சொன்ன பாண்டவர் கதையும் ஆத்திசூடியும, சிலப்பதிகாரமும், கந்தபுராணமும்தான் எமக்குத் தெரிந்த சிறிய அறிவு. 21ம் நூற்றாண்டு தகவல் தொழில்நுட்ப ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு பலவேலைகள் துரிதகதியில் நடந்தேறிக் கொண்டிருக்கும் உலகில் நாமும் ஒரு மூலையில் முடங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
இன்று மாறிவரும் உலகில் கல்வித்திட்டங்களும், கல்விக்கொள்கைகளும் பிரிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நூலகத்தை முன்னுரிமைப்படுத்தி கல்வித்திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கும் இவ்வேலையில் இலங்கையின் தென்பகுதியில் நூலகங்கள் கணனி மயப்படுத்தப்பட்டிடுக்கொண்டிருக்கும் போது இலங்கையின் வட புறத்தில் குறிப்பாக வன்னியில் 1AB தரப் பாடசாலைகளில் கூட நூலகம் இல்லாத அவல நிலை. எமது பிரதேசத்தில் 1AB பாடசாலையின் நூலகத்திற்காக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு 1-1/2 ஆண்டுகளாகியும் கட்டடத்திற்கான அத்திவாரம் மட்டும் போட்டநிலையில் காலம் கழிந்து போகிறன.
அதுமட்டுமல்லாமல் அரசால் வழங்கப்படும் நூலகத்திற்கான நூல்கள் பெரும்பாலும் இன்றைய கல்விக்கொள்கைக்கு அமைவாக அல்லாமல் அபிதான கோஷம், அபிதான சிந்தாமணி, அபிராமி அந்தாதி என்றும் கடைகளில் விற்பனையாகாத புத்தங்களை மலிவுவிலையில் பெற்று அன்பளிப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. அரசின் இச்செயலானது குருடர்களைக் கூட்டிவந்து ‘வழிகாட்டுவோர் வாழும் இடம்” என்று பெயரிடுவதற்கு ஒப்பானதாகும்.
ஒழுங்கான நூலகமோ நூல்களோ இல்லாத நிலையில் நூலகங்களைப் பயன்படுத்துவது பற்றிய அறிவு எப்படி வரும்? இத்தனை அவலங்களையும் கண்ணுற்ற கேட்டறிந்த உதவி நூலகர் ‘கல்வியே எங்கள் மூலதம் கத்தி வைக்கிறது ஆழும் இனம்’ என்பதை தெளிவுபடுத்தினார். அவர் இறுதியாகக் கூறியது தத்தம் பிரதேசங்களையும், பிரதேச வாழ் மக்களையும் வளப்படுத்துவது அப்பிரதேச கல்விமான்களையே சாரும். சிறு துளியாகச் சேர்க்கப்படும் பணம் மூலம் மன வளத்தை ஏற்படுத்தும் உலக அறிவை உருப்படியான காரியத்தைத் தரும் நூலகத்தை உருவாக்கி வளப்படுத்த வேண்டும். அப்படிச் செயல் வடிவம் காட்டுவீர்களேயானால் என்னாலும் உங்களுக்கு உதவி செய்ய முடியும். என பெருந்தன்மையோடு கூறியதை கருத்தமர்வில் கலந்துகொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர்.
உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானால் எமது நாட்டுநிலைகண்டு உலகம் மதிக்கவேண்டுமானால் இந்த சூழ்நிலை மாற்றியாக வேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம் இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது நாம் எமது நாட்டிற்கு மறைமுகமாகச் செய்யும் துரோகமாகும். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, ஏற்கனவே நமது மக்களுக்கு தெரிந்திருக்கும் (மூடநம்பிக்கைகள்) பல விஷயங்களை மறந்து போகச்செய்வதற்கும் பல நூல்கள் தேவை எனவே நூலகம் அவசியம் தேவை.
தமிழர்களின் அறிவு வளர்ச்சியும் அறிவுத் தேடலும்தான் சிங்கள அரசின் கண்களுக்குள் யாழ்நூலகம் அன்று தமிழர்களின் வலுமிகு ஆயுதமாகத்தென்பட்டது. இதன் நீட்சியாகவே யாழ் நூலகம் குறிவைக்கப்பட்டு தீ மூட்டி எரிக்கப்பட்டது.
1981 ஜீன் 01 அன்று இனவெறி பிடித்த காமினிதிசாநாயக்காவின் நேரடி கண்காணிப்பில் தீமூட்டப்பட்ட நிகழ்வை இங்கு நினைவுகூறுவது பொருத்தப்பாடுடையதாக இருக்கும்.
இருபத்து மூன்று ஆண்டுகளின் பின்னான இன்றைய நாட்களில் கூட நூலகத்தின் தேவையும் அதன் அவசியத்தை எமக்கு உணர்த்திய படி இருப்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
நன்றி>சூரியன்.கொம்